பக்கம்:பொன் விலங்கு.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி r 487

இந்திர நீலப் பூக்களைப் போன்ற அந்தக் கருநீல விழிகளில் தானே இமையால் பார்க்கப்படும் ஒரே பொருளாகி விட்டதை எண்ணி அதற்காகவே பெருமைப்படலாம் போலவும் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. அந்தப் பெருமையால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவளுடைய துயரம் நிறைந்த வேண்டுகோள் நினைவு வந்து அழவைத்தது. மை தீட்டாமல் மைதீட்டினாற்போல் கரியதாயிருந்த அந்த நீலக் கருவிழிகளில் நினைத்தபடி வாழ முடியாமல் போய்விட்ட நிராசைகள் தெரிந்தன. தேர்ந்து பழகிய நாட்டியராணியாகிய அந்தக் கலையரசியின் நிராசையிலும்கூட ஓர் அழகிய பாவம் இருந்தது. -

அவளுடைய அந்த வனப்பு வாய்ந்த மூக்கின் நுனியில் அழகு நிறைகிற இடம் இதுவே என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்த மாதிரியும், அழகு இங்கேதான் தனது பரிபூர்ணத் தன்மையை அடைகிறது என்று தீர்மானமாக முடிந்த முடிவு மாதிரியும் ஓர் எழில் கொஞ்சித் தெரிந்தது. முதல் முதலாக அவளை இப்போதுதான் பார்க்கிற புதுமையாய்க் கருதிப் பார்க்கலானான் சத்தியமூர்த்தி, இந்த எழில் வெள்ளம் இதற்குரியவளாலேயே தனக்கு ஆத்ம சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது என்ற் நினைப்பில் அவன் மனம் கர்வப்பட்டது. மாலையினிடையே ஒடும் நார்த்தொடுப்பைப் போல் தன்னுடைய எல்லா எண்ணங்களுக்கும் நடுவே ஓர் இன்றியமையாத உறவாக அவளும் இணைந்திருப்பதை அவனால் உணர முடிந்தது. மூலமாக நடுநிற்கும் அந்த நினைவு தன்னைப் பிணித்திருந்ததன் காரணமாக அதிலிருந்து விடுபட முடியாமலும் விடுபட விரும்பாமலும் கட்டுண்டிருந்தான் அவன். பொன் கிண்ணத்தில் ஒளி நிழல் படிவதுபோல் மோகினியின் அழகிய சிவந்த முகத்தில் தெரியும் அந்த நேரத்து உணர்வுகளை மதித்து அவள் கேட்ட வாக்குறுதியை அவளுக்குக் கொடுத்தான் சத்தியமூர்த்தி.

'உன்னை நன்றாக வாழ வைக்க வேண்டும் மோகினி! ஆனால் இப்போது நானும் ஒரு விதத்தில் அதைச் செய்ய முடியாத பலவீனனாயிருக்கிறேன். உண்மைதான் என்னுடைய பெரிய பலம். உண்மையை நம்புவதும் தொழுவதுமே என்னுடைய மதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/489&oldid=595739" இலிருந்து மீள்விக்கப்பட்டது