பக்கம்:பொன் விலங்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 47

இதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் சிரித்தாள் அவள். அந்தச் சிரிப்பு அவன் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன் என்ற பாவனையில் இருந்ததா, 'மறுக்க விரும்பவில்லை என்ற பாவனையில் இருந்ததா என்பதைப் புரிந்துகொள்ள முயன்றான் சத்தியமூர்த்தி. இதற்குள் கார் கல்லூரிக் காம்பவுண்டிற்குள் நுழைந்து விட்டது. வகுப்பு அறைகளும் விரிவுரைக் கூடங்களும் விடுதிக் கட்டிடங்களுமாக மலைச்சரிவில் கல்விக்காக ஏற்பட்ட ஒரு தனி நகரம் போலத் தோன்றுகிறது அந்த இடம். ஒரே வரிசையில் ஒரே விதமான பலகணிகளோடு நெடுந்தூரத்துக்கு நீண்டு தெரியும் அந்த இரண்டு மாடிக் கட்டிடங்களை மழையோடு கூடிய மலைகளின் பின்னணியில் பார்ப்பது மிக அழகாயிருந்தது.

'உங்களுக்கு அநாவசியமான சிரமத்தைக் கொடுத்துவிட்டேன். இதற்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் பிரின்ஸிபலைப் பார்த்துவிட்டு ஊருக்குப்போய் வருகிறேன். உங்கள் தந்தையிடமும் சொல்லுங்கள்' என்று காரிலிருந்து இறங்கிக்கொண்டு அவளிடம் விடைபெறத் தொடங்கினான் சத்தியமூர்த்தி. அவளோ அவனுக்கு அவ்வளவு விரைவில் விடைகொடுத்து அனுப்பிவிட விரும்பா தவளைப் போல், 'பிரின்ஸியலைப் பார்த்துவிட்டு வாருங்கள். இந்த மழையில் இங்கிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு எப்படிப் போவீர்கள்? உங்களைப் பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விட்ட பின்பு நான் போய்க் கொள்வேன்' என்றாள்.

"எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டுமென்பதில்லை. மழை நிற்கிறவரை நான் காத்திருந்து அப்புறம் போய்க் கொள்கிறேன்" என்று சத்தியமூர்த்தி மறுத்ததை அவள் ஒப்புக் கொள்ளவில்லை. 'பிடிவாதமாக இருந்துதான் தீருவேன் என்பது போலிருந்துவிட்டாள்.

உள்ளே சென்று பிரின்ஸிபலைச் சந்திப்பதற்காகக் கல்லூரி முகப்பின் படிகளில் அவன் ஏறிக் கொண்டிருந்த போது நனைந்து வெளுத்து வெண் தாமரைகளாய்த் தெரிந்த அவனுடைய அந்தப் பாதங்களின் அடிப்புறங்களைக் காரினுள் இருந்தபடியே இரசித்துக் கொண்டிருந்தாள் பாரதி. என்ன காரணத்தினாலோ அவனைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/49&oldid=595740" இலிருந்து மீள்விக்கப்பட்டது