பக்கம்:பொன் விலங்கு.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 பொன் விலங்கு

நாட்களுக்குப் பின் ஒரு நாள் மாலை கல்லூரி வகுப்புகள் முடிந்து ஆசிரியர்களும், முதல்வரும்-கூட்டமாகப் பாரதியைச் சந்திக்கப் புறப்பட்டபோது அவனும் சேர்ந்து செல்ல வேண்டியிருந்தது. கூட்டத்திலிருந்து தன்னை அவனால் பிரித்துக்கொள்ள முடியவில்லை. ஆசிரியர்களை எல்லாம் பார்த்ததும்-பாரதி பெரிதாகக் கதறி அழுதுவிட்டாள். கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் அவள் அருகே வீற்றிருந்தனர். சத்தியமூர்த்தி சிறிது தொலைவு தள்ளி அமர்ந்திருந்தான். அத்தனை பேருக்கு நடுவிலும் அவளுடைய கண்கள் அவனிடமிருந்து தனியாக ஏதோ அநுதாபத்தைத் தேடுவதுபோல் அடிக்கடி அவனை நிமிர்ந்து பார்த்தன. அவனும் அவளுடைய துயரத்துக்காக மனம் வருந்தினான். வாடி இளைத்து முகம் கறுத்துக் களையிழந்து போயிருந்தாள் அந்தப் பெண். அங்கே பூபதியின் படம் ஒன்று பெரிதாக்கப்பட்டுச் சுவரில் மாட்டி மாலை சூட்டப் பெற்றிருந்தது. கல்லூரி முதல்வர் ஜமீன்தாரையும் சந்தித்துத் துக்கம் கேட்க வேண்டும் என்று விரும்பியவராகப் பாரதியிடமே அவரைப் பற்றி விசாரித்தார். அவரும் கண்ணாயிரமும் எஸ்டேட்டுகளைச் சுற்றிப் பார்க்கக் காரில் புறப்பட்டுப் போயிருப்பதாகத் தெரிவித்தாள் அவள். "நாளைக்குச் சாயங்காலம் காலேஜ் போர்டு மீட்டிங் இருக்கிறதே? அதற்குள் திரும்பி வந்துவிடுவார்களோ இல்லையோ?" என்று பாரதியைக் கேட்டுவிட்டுப் பின்புறம் சிறிது தள்ளினாற்போல் நின்றிருந்த ஹெட்கிளார்க்கை ஜாடை காண்பித்து அருகில் வரவழைத்து. "மீட்டிங் சர்க்குலர் எல்லாருக்கும் கையெழுத்துக்குப் போய்வந்து விட்டதா இல்லையா?" என்று விசாரித்தார் கல்லூரி முதல்வர். "ஆமாம் என்று தலையை ஆட்டினார் ஹெட்கிளார்க். - -- - - - - -

பாரதியிடம் தனியாக இரண்டு ஆறுதல் வார்த்தைகள் மனத்தைத் தொடும்படியாகப் பேசவேண்டும் என்று சத்தியமூர்த்தி நினைத்திருந்தது வீணாயிற்று. இதேபோல் அவனைப் பார்த்ததும் தனியே கதறியழ வேண்டுமென்று அவளும் நினைத்து அந்த நினைப்பைச் செயலாக்க முடியாமல் வீணாகியிருக்கலாம். துக்கம் விசாரிக்கிற சடங்கை முடித்துக் கொண்டு ஆசிரியர்கள் புடைசூழத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/506&oldid=595759" இலிருந்து மீள்விக்கப்பட்டது