பக்கம்:பொன் விலங்கு.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 பொன் விலங்கு

வெளியே சென்றுவிட்ட அவமானம், எல்லாவற்றையும் சேர்த்து நினைத்து ஜமீன்தாரின் உள்ளம் கனன்று கொதித்தது.

தேநீர் விருந்தும், பாராட்டுக் கூட்டமும் முடிந்து, ஜமீன்தார் வெளியேறியபோது அவருடைய கார் நின்று கொண்டிருந்த இடம்வரை அவரோடு பக்கத்துக்கு ஒருவராக நடந்து சென்ற கல்லூரி முதல்வரும் துணை முதல்வரும் அவருடைய கோபத்துக்குத் தூபம் போட்டு வளர்த்துக் கொண்டு போனார்கள். ஜமீன்தார் காரில் ஏறிய பின்போ அதே காரியத்தை உடன் இருந்த கண்ணாயிரம் செய்யத் தொடங்கினார். ஜமீன்தார் கோபம் கணத்துக்குக் கணம் சூடேறி உள் நெருப்பாய்க் கனலத் தொடங்கியது. படிப்பில்லாத மனிதனால் தன்னை இன்னொருவன் அவமானப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்துக்கொள்ள மட்டும் முடியவே முடியாது.

அதே சமயத்தில் கூட்டத்திலிருந்து பாதியிலே வெளியேறிச் சென்றிருந்த சத்தியமூர்த்தியோ ஏரிக்கரைப் பூங்காவில் தனிமையானதொரு மூலையில் உட்கார்ந்து, தான் செய்தது சரியா, சரியில்லையா? என்ற சிந்தனைக் குழப்பங்களில் மூழ்கியிருந்தான். அந்தப் பாவ வடிவத்தைத் தன் கைகளால் மாலைசூட்டிக் கெளரவிக்கும்படி நேர்ந்து விடாமல் தப்பித்து வந்துவிட்டதற்காக அவனுடைய ஒரு மனம் அவனைப் பாராட்டியது. பொது வாழ்வில் கெட்டவர்களும், நல்லவர்களும் கலந்துதான் இருப்பார்கள். இன்னும் நன்றாகச் சொல்லப் போனால் சில சமயங்களில் கெட்டவர்கள்தான் அதிகம் இருப்பதாக ஒரு பிரமைகூட கொள்ளுவதும், நல்லவர்களை வெளிப்படையாக ஆதரிப்பதும்கூடக் சில சமயங்களில் அப்படிச் செய்கிறவனுக்குத் தொல்லைகள் உண்டாக்கும். கெட்டவர்களை நல்லவர்கள் த்ொழ நேரிடும்போது போற்றிப் பணிந்து மாலைசூட்ட நேரிடும்போதுகூட உலகில் தெரிந்து அவற்றை முகம் சுளிக்காமல் செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. ஜமீன்தாருக்கு மாலைசூட்ட நேர்ந்த சமயத்தில் கூடியிருந்த கூட்டத்தையும், சூழ்நிலையையும் உணர்ந்து மாலையைச் சூட்டிவிட்டு வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் நீ வெறுத்து வெளியேறி வந்த பிடிவாதம்-யதார்த்த வாழ்வில் உன்னைப் பலவிதங்களில் தொல்லைக்குள்ளாக்கப் போகிறது என்று இன்னொருமனம் அவனைப்பயமுறுத்திப் பார்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/510&oldid=595764" இலிருந்து மீள்விக்கப்பட்டது