பக்கம்:பொன் விலங்கு.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 515

மாணவர்களையும் வகுப்பையும் அப்படி அப்படியே விட்டு விட்டுத்தன்னை உடனே வரச்சொல்லிக்கல்லூரி முதல்வர் திரும்பத் திரும்பக் கூப்பிட்டனுப்புவதைக் கண்டு சத்தியமூர்த்தியின் மனம் வெறுப்படைந்தது. அந்த வெறுப்பின் எல்லையிலே அவன் பிடிவாதக்காரனாக மாறினான். வகுப்பை அப்படியே பாதியில் விட்டுவிட்டு ஆசிரியர் வெளியேறினால் அந்த வகுப்பில் அமைதி குறையும் என்பதும் அப்படி அமைதி குறைவது-பக்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற மற்ற வகுப்புகளுக்கு இடையூறாகும் என்பதும் கல்லூரி முதல்வருக்குத் தெரியாத செய்திகள் அல்லவே? தெரிந்திருந்தும் அவர் ஏதோ முரண்டு பிடிப்பதுபோல் விரட்டியதைக் கண்டு சத்தியமூர்த்தியால் மனம் குமுறாமல் இருக்க முடியவில்லை. &

'வகுப்பை அரைகுறையாக விட்டு விட்டு வருவதற்கில்லை என்று போய்ச் சொல் இல்லையானால் அவர் கைப்படவே வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வந்தாலும் பரவாயில்லை -உடனே நான் அவரைப் பார்க்க வந்தாக வேண்டுமென்று எழுதிக் கையெழுத்தும் போடச் சொல்லி வாங்கிக்கொண்டு வா' என்று கண்டிப்பாகக் கூறி அந்த ஊழியனைத் திருப்பி அனுப்பினான் அவன். அதற்குப்பின் வகுப்பு முடிகிறவரை யாருமே அவனைத் தேடி வரவில்லை. வகுப்பை முடித்துக் கொண்டு வெளியே வராந்தாவுக்கு வந்ததும் அதே பழைய ஊழியன் சத்தியமூர்த்தியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான். உறையின் மேலே சத்தியமூர்த்தியின் பெயர், பதவிப் பெயர் எல்லாம் தெளிவாக எழுதப்பெற்ற ஒரு கடிதம் அந்த ஊழியன் கையிலிருந்தது. உறையை சத்தியமூர்த்தியிடம் கொடுத்துவிட்டு, அதை அவன் பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாகக் கையோடு கொண்டு வந்திருந்த கல்லூரி அலுவலக நோட்டுப் புத்தகத்தில் ஒரு கையெழுத்துப் போடும்படியும் வேண்டினான் அந்த ஊழியன். சத்தியமூர்த்தி சிறிதும் பதறாமல் கடித உறை ஒன்றைக் கல்லூரி அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொண்டதாக அதில் கையெழுத்திட்டான்.

இவ்வளவும் நிகழ்ந்தபோது வகுப்பு முடிந்து வெளியேறிய மாணவர்கள் சத்தியமூர்த்தியைச் சூழ்ந்து கூட்டமாக நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/517&oldid=595771" இலிருந்து மீள்விக்கப்பட்டது