பக்கம்:பொன் விலங்கு.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 519

தாங்களாகவே அநுமானித்துக் கொண்டவை-எல்லாவற்றையும் பற்றித் தாராளமாகப் பேசி வம்பளக்கத் தொடங்கியிருந்தார்கள் பிரின்ஸிபாலுக்காக எழுதி எடுத்துக்கொண்டு வந்திருந்த கடிதத்தை அவருக்குக் கொடுத்தனுப்பிவிட்டு ஆசிரியர்கள் தங்கும் அறையில் அமர்ந்திருந்தபோதுதான் இவ்வளவு வம்புகள் அங்கு நிரம்பிக் கிடப்பதை சத்தியமூர்த்தியே புரிந்து கொள்ள முடிந்தது. அன்றைக்கென்று நேர்ந்தாற்போல் முதல் இரண்டு பாடவேளைகளும் அவனுக்கு எந்த வகுப்பும் இல்லை. பதினோரு மணிக்கு அவன்ைப் பிரின்ஸிபால் கூப்பிடுவதாகக் கல்லூரி ஊழியன் வந்து தெரிவத்தான். சத்தியமூர்த்தி உடனே அவரைச் சந்திக்கச் சென்றான். ஏதோ பெரிய கலகத்துக்காகக் காத்திருப்பதுபோல் பிரின்ஸிபால் அறை வீரர்கள் கைகலப்பதற்கு முந்திய போர்க்களமாய் அமைதி மண்டியிருந்தது. மின்சார விசிறி ஓசைப்படுவதற்கும் பயந்தாற்போல் மெல்ல ஒசைப்பட்டுச் சுற்றிக்கொண்டிருந்தது. சுவரில் நான்கு பக்கமும் பெரிய பெரிய நிலைக்கண்ணாடி அளவுக்குச் சட்டம் போட்டு மாட்டப் பட்டிருந்த காந்தியடிகள் படம், விவேகானந்தர் படம், கவி ரவீந்திரநாத் தாகூர்படம், மகாகவி பாரதியார்படம் எல்லாம் அந்த அறையில் வந்து சிறைப்பட்டுவிட்டதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதுபோல் அமைதியாயிருந்தன. புதிதாகப் பூபதி அவர்களின் படமும் அறையில் முக்கியமானதொரு பகுதியில் மாட்டப்பட்டிருந்தது. சத்தியமூர்த்தி உள்ளே வந்து நின்று பத்து நிமிடங்கள் வரை அவன் வந்து நிற்பதையே கவனிக்காதவர்போல் குனிந்து எழுதிக் கொண்டிருந்தார் பிரின்ஸிபால். மேஜைமேல் டெலிபோன்-பின்குஷன்-மை ஒத்தும் தாள் பதித்த கட்டை-பைல் கட்டுகள்-சத்தியமூர்த்தியின் பிரிக்கப்பட்ட கடிதம் எல்லாம் இருந்தன. அவர் வேண்டுமென்றே தன்னை அலட்சியம் செய்ய முயல்வதாகத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு ஒரு கனைப்புக் கனைத்துவிட்டு நாற்காலியை ஒசைப்படும்படியாக அழுத்தி இழுத்துப் போட்டுக்கொண்டு அவருடைய மேஜைக்கெதிரே உட்கார்ந்து கொண்டான் அவன். முன்பே அவன் வந்திருப்பது தெரிந்திருந்தும் அப்போதுதான் நிமிர்ந்துபார்ப்பவர்போல் பார்த்து, "ஓ நீங்களா?" என்று கேட்டுவிட்டு எழுதிக்கொண்டிருந்ததைத்தொடர்ந்து எழுதலானார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/521&oldid=595776" இலிருந்து மீள்விக்கப்பட்டது