பக்கம்:பொன் விலங்கு.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 பொன் விலங்கு

நீங்களும் அப்படி நினைத்துக் கொண்டுதான் இதைச் செய்திருக்கிறீர்கள்...' என்று தொடங்கி அவன் எழுதியிருந்த பன்னிரண்டு பக்கக் கடிதம் மறுநாள் காலை முதல்வருடைய மேஜைக்குப் போய்ச் சேர்ந்தது. தற்செயலாக அன்று காலை அவன் கல்லூரிக்குள் நுழைந்தபோது-காலையில் சர்க்கரைபோடாத கசப்புக் காப்பியை விடுதியில் வழங்கியதாகவும் சர்க்கரையைக் குறைத்துச் செலவழிக்க வேண்டுமென்று வார்டன் கூறியிருப்பதால் விடுதியின் ஊழியர்களை வற்புறுத்தி வினாவியபோதும் அவர்கள் சர்க்கரை தர மறுத்ததாகவும் சில மாணவர்கள் குறை தெரிவித்தார்கள். மாணவர்கள் கல்லூரி உணவு விடுதி சம்பந்தமான எந்தக் குறையை வந்து தெரிவித்தாலும் அதைச் சத்தியமூர்த்தி பொறுப்பாக உடனே நிவர்த்தி செய்து மாணவர்களின் மனக்கசப்பைப் போக்கிவிடுவான். அதனால் மாணவர்கள் சத்தியமூர்த்தியைத் தேடிக்கொண்டு வந்து எதை வேண்டிக் கொண்டாலும் அது நிறைவேறிவிடும் என்கிற முழு நம்பிக்கையோடு வேண்டிக் கொள்வது வழக்கமாயிருந்தது. ஆனால் இன்றோ தேடி வந்திருந்த மாணவர்களே கேட்டுத் திகைக்கும் படியான ஓர் உண்மையை அவர்களிடம் தெரிவித்தான் சத்திய மூர்த்தி. -

"இளம் நண்பர்களே கல்லூரி விடுதியில் வழங்கும் காப்பி சம்பந்தமாக உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற கசப்பை நான் இன்று மாற்றமுடியாமல் இருப்பதற்காகத் தயவு செய்து நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஏனென்றால் நேற்றுப் பிற்பகலிலிருந்து நான் இந்தக் கல்லூரியில் வெறும் தமிழ் விரிவுரையாளராகத்தான் இருக்கிறேன். விடுதி உதவி வார்டனாக இல்லை..." - இதைக்கேட்டு மாணவர்களுக்குப் பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது.

"ஏன் சார்? நீங்களே வேண்டாமென்று விட்டு விட்டீர்களா?"

"இல்லை. அவர்களே வேண்டாமென்று விட்டுவிட்டார்கள். என்னைக் காட்டிலும் சுறுசுறுப்பாகவும் நன்றாகவும் உங்களுக்கு உதவி செய்ய முடிந்த யாராவது ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்கப்போவதாகக் கல்லூரி முதல்வர் கூறியிருக்கிறார். அதனால், நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/528&oldid=595783" இலிருந்து மீள்விக்கப்பட்டது