பக்கம்:பொன் விலங்கு.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 527

"அப்படிச் சொல்லாதீர்கள் சார் இந்தச் செய்தியைக் கேட்டு எங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது" என்று ஆத்திரப்பட்டுக் குமுறினான் ஒரு மாணவன். சத்தியமூர்த்தி ஒரு புன்முறுவலோடு அந்த மாணவர்களுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டு மேலே நடந்தான். மாணவர்களின் நடுவே சத்தியமூர்த்திக்கு எவ்வளவு செல்வாக்கும், புகழும் உண்டு என்பது கல்லூரி முதல்வருக்குத் தெரியும். அதனால்தான் அவனை உதவி வார்டன் பதவியிலிருந்து நீக்கிய செய்தி எந்தவிதமான பரபரப்புணர்ச்சியுடனும் மாணவர்களிடையே பரவிவிடாமல் அவர் கவனமாயிருந்தார். ஆனால் செய்தி எப்படியோ பரவி விட்டது. லேடி-டைப்பிஸ்ட், 'சத்தியமூர்த்திக்காக என்ன கடிதம் டைப் செய்யப்பட்டது என்ற இரகசியத்தைக் கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜிடம் சொல்லி எப்படியோ மாணவர்களிடையே முதல்வரும், நிர்வாகிகளும் சத்தியமூர்த்திக்கு அநீதி இழைத்திருக்கிறார்கள் என்ற உண்மை பரவிவிட்டது. அதன் விளைவு இருந்தாற் போலிருந்தது பெரிதாக விசுவரூபம் எடுத்தது. விடுதி மாணவர்கள் ஸ்டிரைக் செய்தார்கள். திடீரென்று கல்லூரி முதல்வரே எதிர்பாராதபடி நண்பகல் உணவின் போது ஹாஸ்டல் உணவு விடுதிக்குள் ஒரு மாணவனும் நுழையவில்லை. - -

உணவு மேஜைகளில் விரித்த இலைகளும் தண்ணீர் நிரம்பிய டம்ளர்களும் அப்படியே கிடந்தன. பரிமாறுகிறவர்களும் சமையற் காரர்களும் சாயங்காலம் வரை காத்திருந்து பார்த்தார்கள். மெஸ்ஸிற்குள் ஒரு மாணவன் கூட எட்டிப் பார்க்கவில்லை. சத்தியமூர்த்தியே மறுபடியும் உதவி வார்டனாக வேண்டுமென்பது விடுதி மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது. நாளுக்கு நாள் இதே ஸ்டிரைக் இன்னும் தீவிரமாகியது. முதல் நாள் உணவு விடுதிச் சாப்பாட்டை மட்டும் பகிஷ்காரம் செய்த மாணவர்கள் மறுநாள் சத்தியமூர்த்தியின் வகுப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா ஆசிரியர்களின் வகுப்புகளையும் கூடப் பகிஷ்காரம் செய்தார்கள். 'முதல்வரின் அநீதி ஒழிக’ முதல்வர்-சத்தியமூர்த்தி அவர்களிடம் நியாயமாக நடக்க வேண்டும் உதவி வார்டனை மாற்றாதே' என்றெல்லாம் அங்கங்கே தட்டிகளிலும், சாலைகளிலும் சுண்ணாம்பினாலும் கொட்டை கொட்டையாக எழுதியிருந்தார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/529&oldid=595784" இலிருந்து மீள்விக்கப்பட்டது