பக்கம்:பொன் விலங்கு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - பொன் விலங்கு

அரைகுறையாக ஒலித்த உரையாடலைக் கேட்டவள் என்ன காரணத்தாலோ அப்படியே அதிர்ந்துபோய் நின்றாள். பத்தேமுக்கால் மணிக்கு எந்தப் பதவிக்காகச் சத்தியமூர்த்தி இண்டர்வ்யூ" செய்யப்பட்டானோ அதே வேலைக்காக மூன்று மணிக்கு இன்னொருவரை வரச் சொல்லித் தன் தந்தை இண்டர்வ்யூ செய்வானேன் என்று எண்ணிச்சந்தேகப்பட்டுத் திகைத்தாள் அவள்.

4.

米 நாம் தேடிக் கண்டு பிடிக்க முடியாத அல்லது விரும்பாத பல இடங்களில் வாழ்க்கையின் மிக மென்மையான குணங்கள் அமைந்திருந்து அவை பிறருக்குத் தெரியாமலே போய்விடுகிற சமுதாய நஷ்டத்தை என்னென்பது?

米 தூபகலசத்திலிருந்து சுருள் சுருளாக மேலெழும் இளம் புகை அலைகளைப்போல் மேகங்கள் சரிந்து சோரும்

மலைகளினிடையே பஸ்ஸில் பயணம்செய்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. பள்ளத்தாக்கைவிட்டு மலைமேல் ஏறிவிட்ட பஸ்ஸிலிருந்து திரையை விலக்கிக் கீழே பின்னால் திரும்பிப் பார்த்தபோது இந்த அரிய பொருளைக் கொண்டு வந்து வைப்பதற்கு இடம் இதுதான் என்று அந்த இடத்தைத் தேடிக் கொண்டு வந்து வைத்தாற்போன்ற அருமையாய் மல்லிகைப் பந்தல் ஊர் மழையில் மங்கித் தெரிவதை சத்தியமூர்த்தி கண்டான். வடிவமாகப் பின் தங்கிவிட்டாலும் எண்ணமாக மனத்தில் நிலைத்து விடுகிற சில அழகிய ஞாபகங்களைப்போல் மல்லிகைப் பந்தல் என்ற அழகு சத்தியமூர்த்தியின் கண்களிலிருந்து மறைந்து கருத்தில் தெரியத் தொடங்கியது. அந்த ஊரிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து செல்லும்போது தான் மறுபடியும் அங்கு வந்துவிடவேண்டுமென்ற ஞாபகம் அவனுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்தது. வாழ்வின் நிலையான பாசங்கள் எல்லாம் அவற்றை விட்டுப் பிரிந்து செல்லும் போதே அவற்றின் நெருக்கமும் உறவும் புலப்படும்படி இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/54&oldid=595795" இலிருந்து மீள்விக்கப்பட்டது