பக்கம்:பொன் விலங்கு.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 541

நடித்திருக்கலாம். ஆனால் அவளுடைய அந்தரங்கம் மெளனமாக அவனுக் காகத் தவித்திருக்கிறது. அவளுடைய அந்தரங்கத்தில் அவன் ஒரு தவப் பயனாக நிறைந்திருக்கிறான். யாருடைய அழகான பாதங்கள் அவள் இதயத்தில் நிறைந்திருந்தனவோ அவருடைய அதே பாதங்கள் இன்று மல்லிகைப் பந்தலின் தெருக்களில் வருந்த வருந்த நடந்து வந்துபோலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த காட்சியை அவளும் தன் கண்களாலேயே காண நேர்ந்துவிட்டது. அவளுக்குத் தெரிய வந்த நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்து நினைத்தபோது அவள் மனம் எரிமலையாகக் குமுறியது.

டிரைவர் முத்தையாவைப் போன்ற நாணயமான மனிதனே தன்னிடம் எடுத்த எடுப்பில் நடந்த உண்மையை அப்படியே சொல்லத் தயங்கிப் பட்டும் படாமலும் வேறுவிதமாக சொல்லியதை நினைத்தபோது கெட்டவர்களைத் தவிர அவர்களுக்குப் பயப்படு கிறவர்களும்-இருந்தாக வேண்டிய அவசியத்தைக் கடைப்பிடிக்கிற உலக நியதியை அவள் புரிந்துகொள்ள முடிந்தது. போலீஸ் நிலையத்தின் அருகே சத்தியமூர்த்தி அழைத்துக்கொண்டு போகப்படுவதைப் பார்த்துத் தான் காரை நிறுத்தச் சொல்லிவிட்டுப் பரபரப்பாக கீழே இறங்கிக் கண்டபோது, 'இவரு ஏதோ பையன்களைத் தூண்டிவிட்டுக் காலேஜ் ஹாஸ்டலுக்கு நெருப்பு வச்சிட்டாராம். அதுனாலே. ஜமீன்தார் ஐயாதான் போலீலிலே சொல்லி ஆளை உள்ளார வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காரு' என்று மட்டும் சொல்லித் தனக்கு ஒன்றும் தெரியாதது போல் இருந்துவிட்ட அதே டிரைவர் முத்தையாதான் அப்புறம் மனம் பொறுக்காமல் தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்ல இப்போ இப்படி முன்வந்திருக்கிறான் என்பதையும் அவள் சிந்திக்கத் தவறவில்லை. அவளோடு உடன் வந்திருந்த மகேசுவரி தங்கரத்தினம்-சத்தியமூர்த்திக்கு அநீதி இழைக்கப்பட்டதன் காரணமாக மாணவ, மாணவிகளின் மனங்கள் குமுறிக் கொண்டிருப்பதைப் பற்றியும் கூறினாள். வேலை நிறுத்தத்தினால் அநியாயமாகக் கல்லூரிப்பாடங்களும் வகுப்புகளும் வீணாவதைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டாள். • , * -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/543&oldid=595799" இலிருந்து மீள்விக்கப்பட்டது