பக்கம்:பொன் விலங்கு.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 பொன் விலங்கு

மாவட்டக் கலெக்டரைக் கேட்டுக் கொண்டிருந்தது. பெற்றோர்கள் படிப்பு வீணாகிறதே என்று கவலைப்பட்டார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்குக் கல்லூரி முதல்வரும், நிர்வாகியும் தங்களது முரட்டுப்பிடிவாதத்தால் மாணவர்களின்படிப்பைப் பாழாக்குகிறார்கள் என்ற அபிப்பிராயம் வலுத்திருந்தது. சத்தியமூர்த்தி ஹாஸ்டலுக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்திருப்பதாகப் பத்திரிகைகளில் அன்று காலை செய்தி வந்துவிட்டாலும் மாணவர்கள் அந்தச் செய்தி பொய்யாகுமாறு அவ்வளவு வலுவாக ஊரில் உண்மையைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். கல்லூரி முதல்வர் தனியாக நடந்து வெளியே வர அஞ்சுகிற அளவுக்கு அவரேதம்மைச்சுற்றிப் பயங்கரமானதொரு சூழலைப் படைத்துக் கொண்டு விட்டார். ஆனால் மாணவர்கள் எல்லாரும் கட்டுப்பாடாகவும், ஒழுங்காகவும் நடந்து கொண்டார்கள்.

தங்கள் மேலும் தங்களுடைய மதிப்புக்குரிய விரிவுரையாளர் மீதும் சுமத்தப்பட்டிருந்த பொய்ப் பழிகளை மெய்யோ எனச் சந்தேகிக்கும்படியான எந்தச் சிறிய தவறும் தங்களால் நேர்ந்து விடாதபடி ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மிக அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மானாபிமானம் நிறைந்த தங்கள் விரிவுரையாளருக்குத் தங்களுடைய ஆத்திரத்தால் மெய்யாகவே எந்தப் பழியும் வந்துவிடக் கூடாதென்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாயிருந்தார்கள். முதல் நாள் ஜமீன்தார் கோபித்துக் கொண்டு சீறி விழுந்த பின்பு கல்லூரி வேலை நிறுத்தத்தைப் பற்றி அவரிடம் பேச்சை எடுப்பதையே விட்டுவிட்டு உள்ளுர மனம் புழுங்கிக் கொண்டிருந்த பாரதியிடம் மறுநாள் நடுப்பகலில் ஜமீன்தார் தாமாகவே வந்து வலுவில் பேச நேர்ந்தது. "காலையில் மதுரையிலிருந்து மோகினியும் கணக்குப்பிள்ளையும் காரில் புறப்பட்டு விட்டதாக ஃபோன் வந்தது. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ளார இங்கே வந்திடுவாங்க...வர்ரவங்களை நீதான் கொஞ்சம் கவனிச்சுக்கணும். நானும் கண்ணாயிரமும் பிரின்ஸிபாலை அழைச்சுகிட்டு காலேஜ் பக்கம் போயிட்டு வர்ரோம் மனுசன் பெரிய பயந்தாங்கொள்ளியாயில்ல இருக்காரு..பையன்களோடகூச்சலுக்கே நடுங்குகிற பிரின்ஸிபாலாப் பார்த்து உங்கப்பா வேலைக்கு வச்சிட்டுப் போயிட்டாரேம்மா..." என்று மிகவும் தன்மையாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/552&oldid=595809" இலிருந்து மீள்விக்கப்பட்டது