பக்கம்:பொன் விலங்கு.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 - பொன் விலங்கு

"பிடிக்காதது ஒண்ணுமட்டுமில்லை. எத்தனையோ பிடிக்கலை. வாழ்க்கையை பிடிக்கலை. வாழ்க்கையே பிடிக்காமல் போனப்புறம் பிடிக்காததுன்னு தனியா எதைச் சொல்ல முடியும்?' என்று மோகினி அழுது கொண்டே பதில் கூறியபோது பாரதிக்கு அந்த முடிவிலாச் சோகம் பொறுக்காமல் மனம் நெகிழ்ந்துவிட்டது. ஓர் அநாதைக் குழந்தை தற்காலிகமாகத் தான் ஓர் அநாதை என்பதை மறந்துவிட்டு இன்னோர் அநாதைக் குழந்தைக்குத் தைரியம் சொல்லி ஆறுதலாக உபசரிப்பதுபோல், பாரதி மோகினியை உள்ளே அழைத்துக் கொண்டுபோய்ச்சமாதானப்படுத்தி முதலில் காப்பி குடிக்கவைத்தாள். அப்புறம் வெந்நீரில் குளிக்க வைத்துக் கட்டிக் கொள்ள மாற்றுப் புடவையும் கொடுத்தாள்.

'அக்கா! உங்களுக்குத் தலைகொள்ளாமல் கருகருவென்று நிறையக் கூந்தல் பூவைத்துக் கொள்ளுங்கள்..." என்று ஒரு பந்து மல்லிகைப்பூவோடு வந்து பாரதி பிடிவாதம் பிடித்தபோது மோகினி அந்தப் பூவை வைத்துக்கொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடித்ததுடன் எதை நினைத்தோ மறுபடியும் அழத்தொடங்கிவிட்டாள். மோகினியிடம் பாரதி பூவும் கையுமாக மன்றாடிக் கொண்டிருந்த அதே வேளையில், முன்பக்கத்து அறையில் ஜமீன்தார் கோபமாக இரைந்து பேசிக் கொண்டிருந்த பேச்சு கல்லூரி வேலைநிறுத்தத்தோடு தொடர்புடைய ஏதோ ஒன்றாக இருப்பதுபோல் தோன்றவே பாரதி அதைச் செவிசாய்த்துக் கவனிக்கலானாள்.

"ஒய் கணக்குப் பிள்ளை ஊராருக்கு அடங்காத பிள்ளையை நீரேதான் அடக்கணும். எனக்குமாலை போடறதுக்குமனசுவெறுத்துப் பாதிக் கூட்டத்திலே வெளியே எந்திரிச்சுப் போனான் ஐயா அவன் மனசிலே எத்தினி திமிரு இருந்தா அப்படிச் செய்திருக்கணும்? உம்ம பையன்தான் இப்ப எனக்கு ஒண்ணா நம்பர் விரோதி ஐயா! நீர் அவனை வழிக்குக் கொண்டு வரலியோ எல்லாத்தையும் கூண்டோட தொலைச்சுத் தலைமுழுக வேண்டியதுதான் ஜாக்கிரதை' என்று ஜமீன்தார் இரைந்ததற்குப் பதிலாகத் தணிந்த குரலில் மதுரையிலிருந்து வந்த கணக்குப்பிள்ளை ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நடுநடுவே கண்ணாயிரத்தின் குரலும் ஒலித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/556&oldid=595813" இலிருந்து மீள்விக்கப்பட்டது