பக்கம்:பொன் விலங்கு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பொன் விலங்கு

அன்று மாலையில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஊர்திரும்பும் இரயிலுக்காக அவன் மல்லிகைப் பந்தல் ரோடு ரயில் நிலையத்துக்குள் நுழைந்தபோது நன்றாக இருட்டத் தொடங்கி விட்டது. ஒன்பதரை மணிக்கோ, பத்து மணிக்கோ எல்லா நிலையங்களிலும் நின்று நின்று போகிற பிரயாணிகள் வண்டி ஒன்று உண்டு. அதில் புறப்பட்டால் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் எப்போதாவது மதுரை போய்ச் சேரலாம். புறப்படுகிற நேரமும் உறுதியில்லாமல், போய்ச்சேருகிற நேரமும் உறுதியில்லாமல், இந்தத் தேசத்துச் சராசரி மனிதர்களின் வாழ்க்கை இலட்சியத்தைப் போல் நிச்சயமில்லாத இரயில் அது. அதை எதிர்பார்த்து அந்தக் குளிரிலும் இருட்டிலும் அங்கே காத்திருந்த பலரோடு இப்போது சத்தியமூர்த்தியும் சேர்ந்து கொண்டான். தனியே எதிர்பார்த்துக் காத்திராமல் பலரோடு சேர்ந்து அந்தப் பலரில் ஒருவனாக ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் இரண்டுவிதமான சுவாரஸ்யங்கள் உண்டு. தன்னுடைய ஆவல் ஒன்று, தன்னைப்போன்ற பலருடைய மொத்தமான ஆவல் மற்றொன்று. தன்னுடைய ஆவலைத் தானே உணர்ந்து கொண்டு, மற்றவர்களுடைய ஆவலைப் புரிந்து அநுபவிப்பதில் சுவாரஸ்யம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? - -

முதல் நாள் மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட்டு இன்று அங்கிருந்து திரும்பும் இந்த இரண்டு நாட்களுக்குள்ளேயே நீண்டகாலமாகத் தான் அலைந்து பயணம் செய்தே தன் நாட்களையெல்லாம் கழித்துவிட்டதுபோல ஒரு பிரமை எப்படித் தனக்கு ஏற்பட்டதென்று சத்தியமூர்த்திக்கே புரியவில்லை. பயணம் செய்துவிட்டுத் திரும்பும் ஒவ்வொரு முறையும் இந்த அநுபவத்தை அவன் அடைந்திருக்கிறான். வேலை கிடைத்து மல்லிகைப் பந்தலுக்கே வந்துவிட்டால் போவதும் வருவதுமாக இப்படிப் பலமுறை அந்த இரயில் நிலையத்தில் தான் காத்திருக்க நேரிடும் என்ற நினைப்பும் ஏற்பட்டது அவனுக்கு. அதே சமயத்தில் கல்லூரி அதிபர் பூபதி அந்த வேலையைத் தனக்குத் தருவாரா என்ற சிறிய சந்தேகமும் வந்தது. கடைசியாக அவர் தன்னிடம் பேசிய பேச்சிலிருந்தும், தனக்கு விடை கொடுக்கும்போது மனம் விட்டு எதுவும் பேசாமல் அழுத்தமாக விடை கொடுத்ததிலிருந்தும், தன் பருவத்தின் இளமையை எண்ணி அவர் தயங்குகிறாரா என்று தோன்றியது சத்தியமூர்த்திக்கு. * : . . . . . . . . . . ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/56&oldid=595817" இலிருந்து மீள்விக்கப்பட்டது