பக்கம்:பொன் விலங்கு.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 - பொன் விலங்கு

நிற்கச்செய்து கைகூப்பித் தொழ வேண்டும் போல இருக்கிறது" என்றாள். இந்த வார்த்தையைக் கேட்ட மோகினியோ கண்கலங்க நின்று கொண்டிருந்தாள். 'எனக்குள்ளே சுயமாக நிறைந்திருந்த கலையுணர்வு செத்துப்போய் பல நாட்களாகிவிட்டதம்மா இன்னும் நான் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றால் என்னுள் யாரோ ஒருவருடைய நல்ல ஞாபகம் மீதமிருந்து ஆட்டிக் கொண்டிருக்கிற தென்று தான் சொல்ல வேண்டும்" என்றாள் மோகினி, அவள் இருந்த நிலையைப் பார்த்து அவளிடம் மேலே எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் பாரதி. அப்படி உட்கார்ந்திருந்த வளுடைய கவனத்தைப் பங்களாவின் முன்பக்கம் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த வேறொரு நிகழ்ச்சி கவர்ந்தது. போர்டிகோவில் காரைக் கொண்டு வந்து நிறுத்திக் கண்ணாயிரமும் ஜமீன்தாருமாக-மதுரையிலிருந்து மோகினியை அழைத்துக் கொண்டு முன்தினம் மாலையில் மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்த அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரை எங்கோ புறப்பட வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். "நான் அவனைப் போய்ப் பார்க்கிறதுக்குக் கார் எதுக்குங்க...? நடந்தே போய்ப் பார்த்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லிப்பிட்டு வந்திடறேன்' என்று அந்தக் கிழவர் காரில் ஏற மறுத்ததையும்-காரில் தான் போக வேண்டுமென்று வற்புறுத்திக் கண்ணாயிரமும் ஜமீன்தாரும் அந்தக் கிழவரைப் பிடித்து உள்ளே தள்ளாத குறையாகக் காரில் ஏற்றிவிட்டுத் தாங்களும் பக்கத்துக்கொருவராக ஏறி உட்கார்ந்து கொண்டு எங்கோ அவசரமாகப் புறப்பட்டுப் போவதையும் பாரதி அப்போது கவனித்தாள். முந்தியநாள் மாலையில் இதே கிழவரிடம் ஜமீன்தார் ஏதோ சொல்லிப் பயமுறுத்திக் கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாள் அவள். அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவர் யாரிடம் எதைச் சொல்லி எப்படிக் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்தைத் தடுக்க முடியும் என்பதுதான் அவளுக்குப் பெரிய மர்மமாக இருந்தது. எவ்வளவு சிந்தித்தாலும் எதையும் தொடர்பு படுத்திப் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரைப் பற்றி மோகினிக்கு ஏதேனும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் அந்த நிலையில் இதைப் பற்றி அவளிடம் கேட்கத் தயங்கிக் கொண்டே கேட்டாள் பாரதி. "அக்கா இந்தக் கணக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/562&oldid=595820" இலிருந்து மீள்விக்கப்பட்டது