பக்கம்:பொன் விலங்கு.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 563

பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்ளத்தான் எத்தனை ஆயிரம் தடைகள் மோகினியின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் பாரதி மேலும் மேலும் பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பேச்சு மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றித் திரும்பியது.

"இங்கே ஓர் இளம் விரிவுரையாளர் உதவி வார்டனாக இருக்கிறார். அவர் ரொம்ப நல்லவர். மாணவ மாணவிகளுக்கு எல்லாம் அவர்மேல் உயிர். அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென்று பிரின்ஸிபாலும் ஜமீன்தார் மாமாவும் சதி செய்யறாங்க...அதனாலேதான் ஸ்டிரைக்கே வந்து சேர்ந்தது' என்று அந்த இளம் ஆசிரியரின் பெயர், பதவி ஒன்றையுமே தெரிவிக்காமல் பொதுவாகவே பேசிக்கொண்டு போன பாரதி அப்போது தன்னையறியாமலே தன் பேச்சினால் மோகினியின் ஆவலைத் துடிதுடிக்கச் செய்து கொண்டிருந்தாள். சத்தியமூர்த்தியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை அடக்க முடியாமல்தான் மோகினி கல்லூரி நிர்வாகத்தைப் பற்றிய பேச்சையே பாரதியிடம் வலுவில் தொடங்கியிருந்தாள். வெளிப்படையாகச் 'சத்தியமூர்த்தி என்ற ஆசிரியர் உங்கள் கல்லூரியில் இருக்கிறாரா?" என்று நேரடியாய் விசாரிக்க முடியாமல் பயமும் கூச்சமும் தடுத்த காரணத்தால் அவள் அப்படிச் செய்யவில்லை. மேலும் 'சத்தியமூர்த்தியைப் பற்றி மட்டுமே விசாரித்தால் பாரதிக்கு அதன் காரணமாகத் தன் மேல் என்ன சந்தேகம் மூளுமோ என்ற தயக்கமும் மோகினிக்கு இருந்தது. அவள் வெளிப்படையாக எதைக் குறிப்பிட்டும் விசாரிக்காத காரணத்தால் பாரதி கல்லூரியைப் பற்றியும், மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியும் பொதுவாகவே கூறிக் கொண்டிருந்தாள். அவள் அப்படிப் பொதுவாகக் கூறிய போதிலும் வேலை நிறுத்தத்துக்குக் காரணமாக இருந்த இளம்" ஆசிரியரைப் பற்றி அவள் தெரிவித்த குறிப்புகளைக் கூர்ந்து கேட்ட மோகினி, அந்த இளம் விரிவுரையாளர் சத்தியமூர்த்தியாக இருப்பாரோ? என்ற அநுமானத்தாலேயே மனம் பதறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/565&oldid=595823" இலிருந்து மீள்விக்கப்பட்டது