பக்கம்:பொன் விலங்கு.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 பொன் விலங்கு

பொழுது சாயறப்போ மதுரைலேருந்து கார்லே டான்ஸ்கார அம்மாவைக் கூட்டிக்கிட்டு வந்தாரே ஒரு கணக்குப் பிள்ளைக் கிழவரு-அவருதான் நம்ப சத்தியமூர்த்தி சாரோட தகப்பனாராம். தகப்பனாரு ஜமீன்தார் ஐயாவுக்கும், கண்ணாயிரத்துக்கும் ரொம்பப் பயந்து கட்டுப்படறாரு, அதுனாலே அவரை அனுப்பி சத்தியமூர்த்தி சாரை அடக்கிடலாம்னு ஜமீன்தார் ஐயாவும், கண்ணாயிரமும் கனாக் காண்றாங்க.பிரின்ஸிபால் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி ஏதோ டைப் அடிச்சு கடுதாசியை அந்தக் கிழவரு கையில் திணிச்சு லேக் அவென்யூவிலே சத்தியமூர்த்தி சாரோட ரூம் பக்கத்திலே கொண்டுபோய் அவரை இறக்கி விட்டுப்பிட்டு வந்திருக்காங்க... மேலே என்ன என்ன நடக்கப் போவுதோ? ஒண்ணும் தெரியலை..."

இதைக் கேட்டுப் பாரதியின் திகைப்பு அடங்கவே சில விநாடிகள் பிடித்தன. ஏழ்மையில் நைந்த கோலமும் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுக் கட்டுப்பட்டுப் பயந்த சுபாவமும் உள்ளவராகத் தோன்றிய அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவருடைய முகத்தை இப்போது நினைவுக்குக் கொண்டுவர முயன்றாள் அவள். எதிரே வந்து கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும்போது அப்படி நிற்கிற நிலையிலே நான் ஒரு தீரன் என்று நிரூபித்துக்கொண்டு-வாய் திறந்து பேசினால் எதிரே நின்று கேட்கிறவர்களைப் பிணிக்கும் கணிரென்ற குரலுடன் பேசும் சத்தியமூர்த்தியையும் இந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரையும் சேர்த்துத் தந்தை மகன் என்ற உறவு கற்பித்து நினைக்கவும் முடியாமல் தயங்கியது அவள் மனம். இந்தக் கிழவர்தான் என்னுடைய தந்தை என்பதைத் தானும் தன் தந்தையும் முன்பு மதுரை மஞ்சள்பட்டி அரண்மனையில் போய்த் தங்கியிருந்த போது அங்கு தன் தந்தையைச் சந்திக்கவந்த வேளையில் அவரிடம்கூடச் சத்தியமூர்த்தி தெரிவிக்கவில்லை என்பதையும் பாரதி இப்போது நினைவு கூர்ந்தாள். தாங்கள் மதுரையிலுள்ள மஞ்சள்பட்டி பங்களாவில் தங்கியிருந்த சமயத்தில் இந்தக் கிழவரை அங்கே அடிக்கடி பார்க்க நேர்ந்தும்கூட இவர்தான் சத்தியமூர்த்தியின் தந்தை என்பதைத் தெரிந்து கொள்ள நேரிடாமல் போனதை நினைத்து இப்போது அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. திகைப் பிலிருந்து விடுபட்டுத் தன்நிலையடைந்த பின்பே டிரைவர் முத்தையாவுக்கு விடை கொடுத்தாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/568&oldid=595826" இலிருந்து மீள்விக்கப்பட்டது