பக்கம்:பொன் விலங்கு.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 பொன் விலங்கு

நின்றுவிட்டான். இந்த நிலையில் மோகினி மிகவும் பரிதாபத்துக் குரியவளாகத் தென்பட்டாள். காரிலிருந்து இறங்கித் தயங்கி நின்ற அவளுடைய கண்களில் அழுகையும் கண்ணீரும் முந்திக் கொண்டு வந்தன. 'தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப் படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள் தெரியாதபடி மூடி மறைத்துக் கொண்டிருந்த அவள் உதடுகளில் அழுகை துடிதுடித்துக் கொண்டிருந்தது. அவர்களோடு அந்தக் கடைக்கு வருவதற்குப் பிரியமில்லாமல் வற்புறுத்தப்பட்டு பலவந்தமாகத் தான் அழைத்துக்கொண்டு வரப்பட்டிருப்பதைப் புலப்படுத்திக் கொண்டு நடைப்பிணமாய் நின்றாள் அவள்.

ஜமீன்தாரும், கண்ணாயிரமும் காரிலிருந்து இறங்கி. அப்படி அவர்களைப் போன்ற வசதியும் செல்வாக்கும் உள்ள புள்ளிகளுக்குக் கடைக்காரர்கள் வழக்கமாக அளிக்கும் மிக ஆடம்பரமான லிவிக் ரிஸப்ஷனை'யும் ஏற்றுக்கொண்டு உள்ளே போய்விட்டார்கள். மோகினி மட்டும் பிரமைபிடித்தாற்போல், அழுதுகொண்டு நின்றாள். 'வாங்கம்மா! ஐயா உள்ளாரக் காத்திருக்காரு' என்று கடைக்காரர்களும் காரருகே வந்து அவளை வியாபார விசுவாசத்தோடு மிகப் பணிவாக அழைக்கத் தொடங்கி விட்டார்கள். கடைசியில் ஜமீன்தாரே உள்ளேயிருந்து எழுந்திருந்து வந்து கூப்பாடு போடவே, மோகினி தயங்கித் தயங்கிப் படியேறி கடைக்குள் சென்றாள். அந்த நிலையில் அவள் தன்னை அங்கே பார்த்து விடாதபடி அவசரமாகக் கடைவீதியைக் கடந்து மேலே சென்றுவிட வேண்டும் என்று சத்தியமூர்த்தி எண்ணியிருந்தான். ஆனால் அவனுடைய எண்ணம் கடைசி விநாடியில் வீணாகிவிட்டது. படியேறிக் கடைக்குள் நுழைவதற்காகத் தயங்கித் தயங்கிச் சென்று கொண்டிருந்த மோகினி கடைசிப் படியில் ஏறிவிட்டுத் தற்செயலாக வீதிப்பக்கம் திரும்பியவள்-அவளுடைய பார்வையில் படக்கூடாது என்பதற்காகவே-அப்போது அவசர அவசரமாக வீதியைக் கடந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தியையும் குமரப்பனையும் பார்த்து விட்டாள். அந்தக் கணத்தில் அவளுடைய நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. தன்னையறியாமலே கால்கள் விரைந்து முந்தியதன் காரணமாகத் திரும்பி ஒருபடி கீழே இறங்கவும் செய்துவிட்டாள் அவள். அப்படியே கீழே இறங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/576&oldid=595835" இலிருந்து மீள்விக்கப்பட்டது