பக்கம்:பொன் விலங்கு.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 585

இலக்கியக் கடலைக் கரை கண்டவர். அப்படி எல்லாம் இருந்தும் அவர் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் செல்வாக்குப் பெறவோ, சோபிக்கவோ முடியாமல் போவதற்குக் காரணம் என்னவென்று பாரதி பலமுறை தனக்குள் சிந்தித்துக் காரணத்தையும் உணர்ந்திருக்கிறாள். ஊன்றிய கொள்கைதான் படிப்பின் உறுதிக்குக் காரணம். கொள்கை இல்லாத படிப்பு வேரில்லாமல் ஊன்றிய செடியைப் போல் சிறிது காலம் பசுமையாய்த் தோன்றி விரைவில் பட்டுப்போய் விடுகிறது. கல்லூரி முதல்வருடைய படிப்புப் பட்டுப் போனதற்குக் காரணம் அதுதான்.கண்ணாயிரத்தைப்போல் சந்தர்ப்பத்தினால் முன்னுக்கு வந்தவர்கள் கூடக் குறைத்துப் பேசும்படி நிறையப் படித்தவரான முதல்வர் தாழ்ந்து போய்விட்டாரே என்று மோகினியின் அறைக்குள் நுழைவதற்குமுன் பாரதி நினைத்தாள். இவ்வாறு நினைத்தபோது அவள் ஒரே ஒரு கணம் முதல்வருக்காக அநுதாபப்படவும் செய்தாள். அந்த அநுதாபமும் ஒரு கணம்தான். அடுத்த கணமோ அவளுடைய அநுதாபம் முழுமைக்கும் மோகினி ஒருத்தியே பாத்திரமானாள். மோகினியின் கண்ணிரைத் துடைத்து ஆறுதல் கூற வேண்டிய காரியத்தைத் தானாகவே ஏற்றுக்கொண்டு அந்தக் காரியத்தில் மனம் நெகிழ்ந்து ஈடுபட்டாள் பாரதி.

அதே நேரத்தில் ஜமீன்தாரும் கண்ணாயிரமும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஏமாற்றமளிக்கும் செய்திகளைத் தெரிந்து கொண்டிருந் தார்கள். அன்று பிற்பகல் சத்தியமூர்த்தியிடம் அவனுடைய தந்தையையே அனுப்பி வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்து அது முடியாமற் போயிற்றென்று அறிந்தபோதே, அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. விசாரணைக்காக வருகிற போலீஸ் அதிகாரியையும், கலெக்டரையும் தங்களுடைய விருந்தினராகத்தங்க வைத்துத் தடபுடலாக உபசரித்துக் குளிப்பாட்டிக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள நினைத்துத் தங்கள் சார்பில் பிரின்ஸிபாலை இவர்கள் இருவரையும் அழைக்க அனுப்பியிருந்தார்கள் அவர்கள். அதற்கும் அதிகாரிகள் சம்மதிக்காமல் நழுவிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் ஜமீன்தாருக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. வந்திருக்கிற கலெக்டரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தார் அவர் நேர்மையாளரும், முற்போக்கான மனநிலையுடையவருமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/587&oldid=595847" இலிருந்து மீள்விக்கப்பட்டது