பக்கம்:பொன் விலங்கு.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 பொன் விலங்கு

பேச்சை மிகவும் ஆர்வத்தோடு பேசியதற்கும் அந்த விரிவுரையாளருக்கு நியாயம் கிடைத்த செய்தியை மகிழ்ச்சிப் பெருக்கோடு தெரிவித்ததற்கும், அவர் அவளுடைய மதிப்புக்கும் அன்புக்கும் உரிய விரிவுரையாளர் என்பதைத் தவிர வேறு காரணமே இருக்க முடியாதென்றுதான் மோகினி நினைத்தாள். ஆனால் அதே சமயத்தில் பக்கத்தில் உள்ள மற்றொரு படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பாரதியோ, மோகினிக்கு சத்திய மூர்த்தியிடம் ஏன் இவ்வளவு அக்கறை? என்ற புரியாப் புதிருக்கு விடை காண முடியாமல் மனம் குழம்பிக் கொண்டிருந்தாள். ஓர் ஆணின் மனத்தில் உணர்வுகள் தோன்றலாம். ஆனால் ஒரு பெண்ணின் மனத்திலோ உணர்வுகள் மிக மெல்லப் பூக்கின்றன. உள்ளேயே மணந்து மணந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளைப் பெண் தன்னுடைய பலமான நிதியாக்கிக் கொண்டுவிடுகிறாள். மறுநாள் பொழுது புலர்ந்ததும் மோகினி அப்படி ஆகிவிட்டாள். மனத்தின் முழுமையான மகிழ்ச்சியை அரைகுறையாக வெளிப்படுத்துவதாக முறிந்துமுறிந்து வெளிப்படும் தற்செயலான சங்கீதத்தைப் போல அவளுடைய இதழ்கள் ஏதேதோ பாடல்வரிகளைப் புதிது புதிதாக இசைத்தன. பாரதி அன்றிலிருந்து கல்லூரிக்குப் போய்வரத் தொடங்கலாம் என்று புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்போது நீராடிய ஈரக்கூந்தலைக்

கோதியவாறே மோகினி அவளிடம் தயங்கித் தயங்கி வந்து நின்றாள். >

"என்ன அக்கா உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா? இன்றிலிருந்து காலேஜுக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்..." என்றாள் பாரதி.மோகினி முதலில் சிறிது நாணித்

தயங்கிவிட்டு அப்புறம் கூறலானாள்:

"உன்னால் ஒரு காரியம் ஆகவேண்டும் பாரதீ சத்தியமாக நீ அதைச் செய்வதாக ஒப்புக் கொண்டால்தான் எனக்கு உன் மேல் நம்பிக்கை உண்டாகும்..."

"அதென்ன அக்கா, அத்தனை பெரிய காரியம்? உங்களுக்குக் காரியமும் ஆகவேண்டும்; அதே சமயத்தில் சத்தியமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/598&oldid=595859" இலிருந்து மீள்விக்கப்பட்டது