பக்கம்:பொன் விலங்கு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பொன் விலங்கு

வீட்டின் வைகறைப் போது என்னிடமிருந்துதான் விடிகிறது என்பதுபோல் விடிகாலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் அண்ணா உன் பாயையும் தலையணையையும் திண்ணையில் கொண்டு போய் வைத்துவிட்டேன்' என்று சொல்ல வருவதுவரை தன் தங்கை ஆண்டாள் அந்த வீட்டில் பம்பரமாகச் சுழன்று உழைப்பது சத்தியமூர்த்திக்கு நன்றாகத் தெரியும். ஒடியாடி உழைக்க முடியாமல் தளர்ந்துபோன அம்மாவின் வாயினாலேயே தங்கை ஆண்டாள் புகழப்படுவதைக் கேட்டுச் சத்தியமூர்த்தி பூரித்துப்போயிருக்கிறான். கல்லூரிப் படிப்பு முடிகிறவரை அவன் ஊரோடு வீட்டில் அதிகம் தங்கியதே இல்லை. விடுமுறைகளுக்கு வருவது போவது தவிர, அவனுக்குத் தொடர்ந்து வீட்டில் தங்க வாய்த்ததில்லை. அவன் விடுமுறைக்காக ஊர் வரும் ஒவ்வொரு முறையும் அம்மா ஆண்டாளைச் சுட்டிக்காட்டி

"சத்தியம் இந்த வீட்டின் ஒரே சுறுசுறுப்பும் இவள் தானடா அப்பா..!" என்ற வாக்கியத்தை நாலைந்து தடவையாவது சொல்லத் தவறமாட்டாள். அம்மாவுக்கும் சத்தியமூர்த்திக்கும் ஆண்டாளின் மேல் பிரியமென்றால் கல்யாணி அப்பாவுக்குச் செல்லம், சத்தியமூர்த்தியோ, அம்மாவோ அப்பா காது கேட்கக் கல்யாணியைக் கடிந்து கொள்ளவும், கோபித்துக் கொள்ளவும் கூடத் தயங்குவார்கள். அப்படியே தப்பித் தவறி காது கேட்கும்படி அவர்கள் அவளைக் கடிந்து கொள்ள நேரிட்டாலோ, 'அவளுக்கென்ன தெரியும்? அவள் குழந்தை அவளைக் கோபித்துக்கொள்ளாதீர்கள்." என்பார் அப்பா. -

"இந்தப் பிறவி மட்டும் கடைத்தேறுவதற்கு நீ குறைந்தபட்சம் ஒரு கோடி துப்பறியும் நாவல்களாவது படிக்க வேண்டும், கல்யாணி' என்று சத்தியமூர்த்தி எப்போதாவது கல்யாணியை வம்புக்கு இழுப்பான். -

"நிச்சயமாக நம் கல்யாணிகள் பிறவி கடைத்தேற ஒரு கோடி துப்பறியும் நாவல்கள் போதாது அண்ணா!' என்று அந்த நேரம் பார்த்து ஆண்டாளும் சத்தியமூர்த்தியோடு சேர்ந்து கொள்வாள். இதைக் கேட்டுக் கல்யாணிக்குக் கோபம் கோபமாக வரும்.

"பார் அப்பா, இவர்களை கட்சி கட்டிக்கொண்டு இரண்டு பேருமாக என்னிடம் வம்புக்கு வருகிறார்கள்' என்று அப்பாவிடம் போய்ப் புகார் செய்வாள் கல்யாணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/60&oldid=595862" இலிருந்து மீள்விக்கப்பட்டது