பக்கம்:பொன் விலங்கு.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600 பொன் விலங்கு

ஒண்ணும் சின்னஞ் சிறிசோ, பச்சைப் பசலையோ இல்ல. எத்தினி அழுதாலும் அந்தப் புண்ணியப் பெறவி-மகராசன் இனிமே வரப்போறாரா? விவரந் தெரிஞ்ச பொண்ணு, நீயாத்தான் உன் மனசைத் தேற்றிக்கணும்..இன்னிக்கு மனசு சரியா இல்லேன்னா காலேஜுக்குப் போகாட்டிப் போவுது... நாளைக்குப் போயிக் கலாம்மா என்ன சொல்றே? வண்டியை வீட்டுக்குத் திருப்பட்டுமா" என்று அவளுடைய துயரத்துக்குத் தந்தையின் ஞாபகம்தான் காரணமோ? எனத் தானாகவே தனக்குள் கற்பித்துக் கொண்டு ஆறுதல் கூறத் தொடங்கியிருந்தான் டிரைவர் முத்தையா. 'இல்லே முத்தையா காலேஜுக்கு அப்புறம் போகலாம். முதலில் லேக் அவென்யூவுக்கு போ' என்று கண்ணிரைத் துடைத்துக் கொண்டு அவனுக்கு மறுமொழி கூறினாள் பாரதி. அப்போது அவள் கையிலிருந்த கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்கிடையே மோகினி சத்தியமூர்த்தியிடம் அளிப்பதற்காகக் கொடுத்தனுப்பியிருந்த கடித உறை இருந்தது. அவள்மேல் தனக்கிருக்கும் அதிக நம்பிக்கையை நினைவூட்டுவதற்காகவோ அல்லது உறைக்குள்ளே இருக்கிற கடிதத்தில் எந்த இரகசியமும் இல்லை என்று கருதியதாலோ உறையை ஒட்டாமலே திறந்து வைத்திருந்தாள் மோகினி. செய்த சத்தியத்தையும் ஒப்புக்கொண்டு வாக்குக் கொடுத்துவிட்டதையும் காப்பாற்றுவதற்காகப் பாரதி அந்தக் கடிதத்தை சத்தியமூர்த்தியிடம் கொண்டுபோய்ச் சேர்த்தேயாக வேண்டும். தான் நியாயமாக நடந்துகொள்ள வேண்டுமானால் அதை சத்தியமூர்த்தியிடம் கொடுப்பதற்கு முன் தானும் ஒருமுறை படித்துவிடவேண்டுமென்று இந்த விநாடியில் தன் மனத்தின் அடிமூலையில் எழுகிற திருட்டு ஆசையைத் தான் விட்டுவிடுவதே நல்லதென்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் மிகப்பல சமயங்களில் மனிதர்களால் நினைப்பளவிலும் சொல்லளவிலும்தான் நியாயத்துக்கும் சத்தியத்துக்கும் அதிகபட்சமாக மரியாதை செய்யமுடிகிறது. 'நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்க முடிந்த வரை பெரும்பாலான மனிதர்கள் நல்லவர்கள்தான். இந்த நினைப்பின் எல்லை வரை எல்லார்க்கும் வெற்றிதான். ஆனால் இந்த நினைப்பளவைக் கடந்து செயலளவு-என்ற இடம் வரும்போதுதான் சத்திய சோதனை மெய்யாகவே ஆரம்பமாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/602&oldid=595865" இலிருந்து மீள்விக்கப்பட்டது