பக்கம்:பொன் விலங்கு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 59

'அவளுக்கென்ன தெரியும்? அவள் குழந்தை' என்று வழக்கமான வாக்கியத்தோடு செல்லப் பெண்ணுக்குப் பரிந்து கொண்டு வருவார் அப்பா. அந்த வீட்டின் வசதிகளற்ற வறுமை வாழ்விலும் இப்படி ஒரு செல்லம், பரிவு எல்லாம் உண்டு.

மதுரையில் தன் வீட்டைப் பற்றியும் அதன் பலங்களையும் பலவீனங்களையும் பற்றியும் ஒவ்வொன்றாக சிந்தித்தான் சத்தியமூர்த்தி. அப்பாவிலிருந்து தங்கை ஆண்டாள்வரை தன்னுடைய மல்லிகைப் பந்தல் இண்டர்வ்யூ சாதகமாக முடிந்து தான் ஆர்டருடனோ, அல்லது ஆர்டர் நிச்சயமாகக் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையுடனோ திரும்புவதாகத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று அவன் அறிந்திருந்தான். ஆனால் நிச்சயமான எந்த விடையுடனும் இப்போது அவன் ஊர் திரும்பவில்லை. கல்லூரி அதிபர் பூபதியும் உறுதி கூறாமல் விடை கொடுத்திருந்தார். கல்லூரி முதல்வரும் உறுதி கூறாமல்தான் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பியிருந்தார்.

'பிரின்ஸிபலைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள். அவர் எல்லா விவரமும் சொல்லுவார்' என்று கல்லூரி முதல்வரிடம் அவனை அனுப்பியிருந்தார் பூபதி. கல்லூரி முதல்வரோ அவனுடைய சர்டிபிகேட்களின் ஒரிஜினல்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு, "நீங்கள் போகலாம். கோடைவிடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதற்குமுன் உங்களுக்கு விவரம் தெரிவிக்கிறோம்' என்று மறுமொழி கொடுத்திருந்தார். இரண்டு பேருடைய விடைகளும் ஏறக்குறைய ஒரே விதமானவைதாம். அவற்றுக்கு ஆழமான அர்த்தமான விளைவோ எதுவும் எதிர்பார்ப்பதற்கில்லை. வழக்கமான எல்லாருக்கும் எல்லா இடத்திலும் சொல்லுகிற விடைதான் அது. தன்னுடைய பேச்சின் இறுதிப் பகுதியில் பூபதியோடு தான் முரண்பட்டதை அவர் விரும்பவில்லை என்ற உண்மை சத்தியமூர்த்திக்குப் புலப்பட்டிருந்தாலும் அவ்வளவு பெருந்தன்மையான மனிதர் அந்தச் சிறிய கருத்து முரண்பாட்டை ஒரு தகுதிக் குறைவாக எடுத்துக்கொண்டு தன்னை வெறுக்க முடியும் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஆனபடி ஆகட்டும் என்று அந்தச் சிந்தனையையே மறக்க முயன்றான் சத்தியமூர்த்தி.

இரயில் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கோடை நாட்களில் அந்த நிலையத்துக்கு "ரிடர்ன் டிக்கட்' வசதி உண்டாகையால் சத்தியமூர்த்தியிடம் திரும்புவதற்கும் டிக்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/61&oldid=595873" இலிருந்து மீள்விக்கப்பட்டது