பக்கம்:பொன் விலங்கு.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - - 609

பணிவிடை செய்தாள் மோகினி. சிறு வயதிலேயே தாயன்பை இழந்திருந்த பாரதி மோகினியின் சிலநாள் பணிவிடையிலேயே அதை உணர்ந்தாள். பார்க்கும் கண்களை அப்படியே இழுத்து நிறுத்தித் தன்மேல் நிலைக்க வைக்கும். மோகினியின் உடல் வனப்பும் அந்த வனப்பை உறுதிப்படுத்தி சாட்சி சொல்வது போல் அவளிடம் அமைந்திருந்த நாட்டியக்கலைத் திறனும்தான் இதுவரை பாரதிக்குத் தெரிந்திருந்தவை. இப்போதோ உடல் வனப்புக்கும், கலைத் திறனுக்கும் அப்பால் மோகினியின் மிக உயர்ந்த மனப் பண்பும் அவளுக்குத் தெரிந்துவிட்டது. அந்த மனத்தில் கருணையும், பரிவும் நிறைந்துள்ளதை அவள் அநுபவபூர்வமாகப் புரிந்து கொண்டுவிட்டாள். உடம்பின் வனப்பைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மனத்தின் வனப்பை அவள் பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்தபோது பாரதியால் அவள்மேல் எந்தக் காரணத்துக்காகவும் பொறாமைப்பட முடியவில்லை. சத்தியமூர்த்தியின் மனத்தை வென்று அவருக்கு ஆட்பட்டு, மோகினியால் அவருடைய அன்பைப் பெற முடிந்ததற்காகப் பெருமைப்பட்டு அந்தப் பெருமையோடு தன் ஆற்றாமையையும் நினைத்து உள்ளுருக முடிந்ததே தவிரப் பாரதியால் அவன்மேல் குரோதமடைய இயலவில்லை. ... . . . . . . . .

மோகினியிடம் அமைந்திருந்த இணையிலாப் பேரெழிலும் கலைத்திறனும் பாரதிக்கு அவள்மேல் குன்றாத பயபக்தியை உண்டாக்கியிருந்தாலும் அவளிடம் சூது வாதும், கள்ளங் கபடு. மிகுந்த உலகியல் அறிவும் சிறிதும் இல்லாததால் அவள் இன்னும் ஒரு பேதையாகவே இருக்கிறாள் என்பதைப் பாரதி புரிந்துகொண்டிருந்தாள். பாரதி உடல் நலமின்றிப் படுக்கையில் கிடந்த பத்துப் பதினைந்து நாட்களில் தேவையானபோது டாக்டருக்குஃபோன்செய்து வரவழைப்பது தவிர மற்ற நேரங்களில் அன்பும், பரிவும், பாசமும் மிகுந்த ஒரு நர்ஸ் போலவே மோகினி உடனிருந்து கவனித்ததன் காரணமாக அவளும் பாரதியும் மனம் விட்டுப்பழக நேர்ந்தது. அப்படிப்பழக நேர்ந்த வேளைகளிலும்கூட மோகினி தன்னை ஒரு பேதையாகவே அவளிடம் நிரூபித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அதே சமயத்தில் பாரதியோ உலகியல் அறிவோடு ஒட்டிய சூது வாதும், கள்ளங் கபடும் நிறைந்த

பொ. வி. 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/611&oldid=595875" இலிருந்து மீள்விக்கப்பட்டது