பக்கம்:பொன் விலங்கு.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 613

மறுமொழி கூறினாள் பாரதி. அவள் தன் உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு நடித்த அதே வேளையில் மோகினி தன் அந்தரங்கமான உணர்ச்சிகளையெல்லாம் ஒன்றுவிடாமல் அவளிடம் கொட்டத் தொடங்கினாள். பாரதி அவற்றையெல்லாம் ஏற்கெனவே மோகினி தன்னிடம் சத்தியமூர்த்திக்காகக் கொடுத்தனுப்பிய கடிதத்தில் படித்துப் புரிந்து கொண்டிருந்தாலும் இப்போதுதான் புதிதாகக் கேட்டுத் தெரிந்து கொள்கிறவளைப் போல மிகவும் ஆர்வத்தோடு கேட்கத் தொடங்கினாள். மனித மனத்தின் பலவீனமான வேளைகளில் இப்படிப்பட்ட வேளையும் ஒன்றாகும். பலரிடம் வாழ்க்கையின் அந்தரங்கங்களைச் சொல்ல முடியாததைப்போல் சிலரிடமாவது அவற்றைச் சொல்லாமலிருக்கவும் முடியாது. பாரதியை மனப்பூர்வமாக நம்பி அவளிடம் தன் வாழ்க்கையின் அந்தரங்கங்களை யெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று அந்த விநாடியில் தன்னுள் பொங்கியெழும் உணர்ச்சி வேகத்தைத் தடுத்துக்கொள்ள முடியாமல் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் மோகினி. மோகினி கூறுவதைக் கேட்கக் கேட்கப் பாரதிக்கு கண்கள் கலங்கின. பாவம் பேதை மோகினி அப்போது தான் சொல்லிக் கொண்டிருந்த சோகமயமான சுயசரிதத்தையும், தான் சத்தியமூர்த்திக்கு ஆட்பட்டதைக் கேட்டு இளகிய சுபாவமுள்ளவளாகிய பாரதி சும்மா கண்கலங்கி அழுகிறாள் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டாள். ஆனால் அவளுடைய கலக்கத்தில் சொந்தக் காதலில் ஏமாறிய ஏமாற்றமும் தோல்வியும் இருப்பதைப் பேதையான மோகினியால் ஒரு சிறிதும் புரிந்துகொள்ள முடியவில்லை.

"என் கதை இதுதான் பாரதி நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் நீகூட ஒருநாள் என்னைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோபேசினாய்! 'ஜமீன்தார் உங்களுக்குக்கூட இதெல்லாம் சொல்வதில்லையா அக்கா? என்று ஜமீன்தாரும் நானும் ரொம்ப நெருக்கமாக இருக்கிறாற்போல நீயாக நினைத்துக்கொண்டு கூறியபோது நான் திகைத்தேன். ஏதோ எங்கள் குடும்பம், என்றோ ஜமீன் உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறது என்ற நன்றியினாலும் இந்தக் கொடிய ஜமீன்தாரிடமுள்ள பயத்தினாலும் நான் சில சமயங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/615&oldid=595879" இலிருந்து மீள்விக்கப்பட்டது