பக்கம்:பொன் விலங்கு.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 - பொன் விலங்கு

இவர்களுக்கு அஞ்சிக் கட்டுப்படுகிறேன். என் மனம் வேறு எங்கே இருக்கிறதென்று இப்போதாவது நீ தெரிந்துகொண்டிருப்பாய் பாரதீ' என்று மோகினி உருக்கமாகக் கூறி முடித்தாள். அவள் இவற்றையெல்லாம் கூறி முடித்தபின் சிறிது நேரம் பாரதிக்கும் அவளுக்குமிடையே பேச்சில்லாததோர் மெளனம் நிலவியது: இருவருக்குள்ளேயுமோ மெளனமில்லாத ஊமைப் பேச்சுகள் ஆயிரமாயிரமாகக் குமுறிக் கொண்டிருந்தன. இருவருக்கு மிடையே வெளிப்படையாக நிலவிய மெளனம் இருவருள்ளேயும் குமுறும் மனத்தின் பேச்சுக்களை ஒரு விதத்தில் அளவிட்டுக் காட்டுவதாக இருந்தது. அந்த மெளனத்தைக் கலைத்துவிட்டுப் பாரதிதான் முதலில் பேசத் தொடங்கினாள். .

"அக்கா நீங்கள் பாக்கியசாலி..." என்று இருந்தாற்போலிருந்து அழுகை தயங்கும் குரலில் மோகினியிடம் கூறினாள் பாரதி. கூறிவிட்டு அசையாமல் மோகினியின் முகத்தையும் அப்போது கூர்ந்து கவனித்தாள் அவள்.

"ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்னிடம் இன்று திடீரென்று என்ன பாக்கியத்தைக் கண்டுவிட்டாய் பாரதி?"

"தகுந்த காரணத்தோடுதான் சொல்கிறேன் அக்கா நீங்கள் நிச்சயமாகப் பெரிய பாக்கியசாலி பாக்கியசாலிகளால்தான் காதலில் ஜெயிக்க முடிகிறது. துர்ப்பாக்கியசாலிகள் அநேகமாக எப்படியாவது தோற்றுப்போய்விடுகிறார்கள்."

"இருக்கலாம்! ஆனால் என்னுடைய பாக்கியமோ அல்லது துர்ப்பாக்கியமோ இன்னும் தீர்மானமாக முடிவாகவில்லையே அம்மா? என்னுடைய சகல செளபாக்கியங்களும் அவர் ஒருவர்தான் அவரோ என்னிடமிருந்து வெகு தொலைவில் விலகியிருக்கிறார். அவருக்குக் கெடுதல் செய்து அவரை இந்தக் கல்லூரியிலிருந்தே வெளியேற்றித் துரத்தி அனுப்பிவிட வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்கள் யாரோ அவர்களுக்கே இந்தக் கையால் இங்கே குளுகோஸ் கரைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் நான் என்னுடைய இந்தப் பாவத்துக்கு விடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/616&oldid=595880" இலிருந்து மீள்விக்கப்பட்டது