பக்கம்:பொன் விலங்கு.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 பொன் விலங்கு

பாழாக்கிக் கொண்டிருந்தன, "இதே வீட்டு வாசலில் தன்னைத் தேடிவந்து இரயிலில் தான் தவறவிட்ட பேனாவைக் கொடுத்துவிட்டு, "என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வருகிறேன்" என்று சித்திரம்போல் அடக்கமாய் நின்று மோகினி தெருவிலிருந்தவாறே சிரித்தபடி தன்னைக் கைகூப்பிச் சென்றதும், அவளுடைய கைபட்டு மணந்த அந்தப் பேனாவை நெஞ்சின் மேலேயும் அவளைப்பற்றிய அனுதாபத்தை நெஞ்சின் உள்ளேயும் பதித்துக்கொண்டு அன்று தான் அவளுக்காக மனம் உருகியதையும் இப்போது நினைத்தான் சத்தியமூர்த்தி. அதன் பின்பு மீனாட்சி கோவில் பிராகாரத்தில், 'உயிரைக் கொடுத்த தெய்வத்தைத் தரிசிக்க வந்தேன். அப்படி வந்த இடத்தில் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தின் தரிசனம் கிடைத்திருக்கிறது' என்று சொல்லிவிட்டுக் கீழே குனிந்து அவள் தன் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டதையும், 'ஆதரவற்றதெல்லாம் ஏழைதான் அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை என்று சிரித்தபடி தனக்கு மறுமொழி கூறியதையும், சித்ரா பெளர்ணமியன்று அவளுடைய நாட்டியத்தைப் பார்த்துத் தான் மனம் உருகியதையும், கடைக் கண்களால் நோக்கிப் புன்னகை கிறங்கும் இதழ்களைத் திறந்து, இந்த வீட்டில் நீங்கள் எடுத்து வாசிப்பதற்காகவே உங்கள் காலடியில் காத்துக் கிடக்கும் வாத்தியம் இதோ இருக்கிறது என்று அவள் தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்ததையும் அந்த அதிகாலை நேரத்தில் இரயிலில் மேளம் கொட்டாமல் நாதஸ்வரம் வாசிக்காமல் பாணிக்கிரணம் செய்து கொண்டது போல் கையைப் பிடித்து இழுத்தீர்களே என்று அவள் தன்னிடம் உணர்வு மல்கக் கூறியதையும் கற்பையும் கன்னிமையையும் காத்துக் கொள்வதற்காகவே உயிர் நீத்த தன் பெரிய பாட்டி மதுரவல்லியோடு அவள் தன்னை ஒப்பிட்டுப் பேசியதையும், முருகன் படத்துக்கு அவள் சூட்டிய மாலை அதற்கு நேர்கீழே அமர்திருந்த அவன் கழுத்தில் நழுவி விழுந்தபோது அதைக் கழற்ற முற்பட்ட அவனுடைய தோள்களைப் பூச்செண்டு போன்ற தன் இரு வளைக்கரங்களாலும் பற்றிக்கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/642&oldid=595909" இலிருந்து மீள்விக்கப்பட்டது