பக்கம்:பொன் விலங்கு.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 பொன் விலங்கு

'காம்ப்'லிருந்து திரும்பவே அவரைப் பார்த்து எல்லா விவரமும் கூறியபின் தன் வீட்டுக்கும் ஒரு நடை சென்றிருந்தான்.

சத்தியமூர்த்தி டெல்லியிலிருந்து திரும்பிய தினத்தன்று அவனுடைய தந்தை மதுரையில்தான் இருந்தார். ஆனால் அவன் அம்மாவைப் பார்த்துச் சொல்லிக் கொள்ளப் போயிருந்தபோது அவர் வீட்டில் இல்லை. அம்மா எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவர் திரும்பி வருகிற வரை வீட்டில் காத்திராமல், அம்மாவிடமும் தங்கைகளிடமும் மட்டும் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டான் சத்தியமூர்த்தி. அவன் புறப்படும்போது வாசல் வரை கூட வந்த தங்கை ஆண்டாள், 'அண்ணா! நீ ஊரில் இல்லாதபோது உன் பெயருக்கு நேற்றோ முந்தாநாளோ மல்லிகைப் பந்தல் தபால் முத்திரையோடு ஒரு ரிஜிஸ்தர் கவர் வந்தது. போஸ்ட்மேன் பழக்கத்தினால் தன்மையாக அப்பாவிடமே கையெழுத்து வாங்கிக்கொண்டு அதைக் கொடுத்து விட்டான். அதிலே என்னதான் இருந்ததோ? தெரியலை. அப்பா அதை வாங்கிப் பிரித்துப் படித்து விட்டு ரொம்பக் கோபமா அப்படியே கிழிச்சு அடுப்பிலே கொண்டு போய்ப் போட்டாரு' என்று காதருகே சொல்லிவிட்டுப் போனாள்.

'குமரப்பனை அவருக்குப் பிடிக்காது. அவன் எனக்கு ஏதாவது கடிதம் எழுதியிருப்பான். அதைக் கிழித்து அடுப்பில் போட்டிருப்பார் என்று முதலில் நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. ஆனால் அதே சமயத்தில் நண்பன் தனக்கு பதிவுத் தபாலில் என்ன கடிதம் எழுதியிருக்க வேண்டுமென்ற சந்தேகமும் உண்டாகியது. அப்போதிருந்த பரபரப்பில் அதைப் பற்றி அதிகம் சிந்திக்க நேரமில்லை அவனுக்கு. மோகினி எழுதிய கடிதமொன்றைப் பாரதி வாங்கி பதிவுத் தபால் மூலம் தன்னுடைய மதுரை முகவரிக்கு அனுப்பியிருக்க முடியும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லையாதலால் அந்த நினைவே அப்போது அவனுக்கு வரவில்லை. மூன்றாம் நாள் காலை மல்லிகைப் பந்தலுக்கு பஸ்ஸில் வந்து இறங்கிய போது, இன்னும் சில நாட்களில் டில்லியிலிருந்து விவரம் தெரிந்தபின் பிரின்ஸிபாலிடம் தனது ராஜினாமாக் கடிதத்தைக் கொடுப்பதென்ற உறுதியான முடிவுக்கு வந்திருந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/648&oldid=595915" இலிருந்து மீள்விக்கப்பட்டது