பக்கம்:பொன் விலங்கு.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 பொன் விலங்கு

கொண்டிருந்தன. டெல்லியிலிருந்து அவன் தேர்ந்தெடுக்கப்பட்ட தந்தி கிடைத்துவிட்டது. பாஸ்போர்ட், எக்ஸேஞ்ச் கண்ட்ரோல் அநுமதி எல்லாம் கிடைத்துவிட்டன. குத்துவிளக்கிலிருந்து வெளியேறிய போது குமரப்பனிடம் கொஞ்சம் பணம் இருந்தது. மல்லிகைப் பந்தலில் கடை வைத்தபின் இன்னும் கொஞ்சம் சேர்ந்திருந்தது. கண்ணாயிரத்தின் கடனை அடைப்பதற்கும், வெளிநாடு செல்ல உடை முதலிய வற்றுக்கும், கையில் கொண்டு போவதற்கும் சத்தியமூர்த்திக்கு மனம் விரும்பி உதவினான் அவன். கல்லூரி முதல்வரிடம் உரிய காலத்தில் சத்தியமூர்த்தி தன்னுடைய இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுத்துவிட்டான். அப்படிக் கொடுக்கும்போது நீங்கள் இந்தக் கல்லூரிக்கு ஆசிரியராக வந்து மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிப்பது தவிர இந்தக் கல்லூரியின் எதிர்கால அநுபவங்கள் உங்களுடைய இளமை வேகத்துக்கு ஒரு பாடமாகவும் ஆகலாமல்லவா? என்று எப்போதோ காலஞ்சென்ற பூபதி தன்னிடம் கூறியிருந்ததை இப்போது ஒருகணம் நினைத்துச் சிரித்துக் கொண்டான் அவன்.

ஒரு மனிதனுடைய நேர்மையான சமுதாயத் தேவைகள்கூட அவன் நினைத்தபடி நிறைவேறாது. ஒவ்வொரு நல்ல மனிதனும் தன்னுடைய தேவைக்காக மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் பிறருடைய நியாயத்துக்காகவும் சேர்த்தே போராடியாக வேண்டும் என்பதுதான் அன்றும் இன்றும் என்றும் சத்தியமூர்த்தியின் வாழ்க்கையின்நோக்கமாயிருந்தது. அதனால்தான் மிகக் குறுகிய கால ஆசிரிய வாழ்க்கையிலேயே மல்லிகைப் பந்தல் கல்லூரியில் இவ்வளவு சோதனைகளும் அவனுக்கு ஏற்பட்டு விட்டன. புனித மனத்தின் எல்லையற்ற சோகத்தையோ எல்லையற்ற சந்தோஷத்தையோ அப்படியே சொல்லி முடிப்பதற்குப் பாஷையும் சில சமயங்களில் பரிபூரணமாகத் துணை செய்வதில்லை. தெரிந்தோ தெரியாமலோ மனித உணர்ச்சிகளின் சங்கமம்தான் வாழ்க்கையாயிருக்கிறது. ஆனால் உணர்ச்சிக்குப் பாஷை எப்போதுமே கருவியாக இருந்து ஒத்துழைப்பதில்லை.

அந்தச் சில நாட்களில் குமரப்பனோடு கூடச் சத்தியமூர்த்தி அதிகமாகப் பேசவில்லை. வெளிநாட்டுப் பயணத்துக்கான உடுப்புகளைத் தைக்கக் கொடுப்பதற்காக மல்லிகைப்பந்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/658&oldid=595926" இலிருந்து மீள்விக்கப்பட்டது