பக்கம்:பொன் விலங்கு.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 671

புன்முறுவல் பூக்க நெகிழ்ந்தன. கமலக் கைகள் யாரையோ வணங்க வேண்டும் போலக் குவிந்து கூப்புவதற்கு முந்தின. அன்று அப்போது அந்த விநாடியில் தான் மிகமிக அழகாயிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. சரீரமே மணக்கும் மல்லிகைப் பூ மாலையாக மாறிக்கனமில்லாமற் போய்விட்டதுபோலிருந்தது. ஒரு கையில் வீணையும் மற்றொரு கையில் ஏடுமாக வெள்ளைத் தாமரைப் பூவில் வெள்ளைத் திருவுடை தரித்துச் சரஸ்வதி தேவி போல் யாரோ தெய்வம் நெஞ்சில் பிரசன்னமாகி, இன்னும் தாமதமேன் குழந்தாய் புறப்பட்டு வந்துவிடு' என்று அவசரமாகக் கூப்பிடுவதுபோல ஒரு பிரமை உண்டாகி, அந்தக் கணத்தில் அவளைப் புல்லரிக்க வைத்தது.

இந்த உலகை மறந்து கொஞ்சம் நிம்மதியாகத் தூங்க வேண்டும் போலவும் அவளுக்கு ஆசையாயிருந்தது. ஆனால் துக்கம் வரவில்லை, எங்கேயோ போக வேண்டும் போல் ஓர் அவசரத்தை உணர்ந்தாள். ஆனால் எங்கே போக வேண்டுமென்பதும் தெரியவில்லை. யாரையோ பார்க்க வேண்டும் போலப் பரபரப்பாகத் தவித்தாள். ஆனால் யாரைப் பார்க்க வேண்டுமென்றும் தெரியவில்லை. மீனாட்சியம்மன் கோயில் கோபுரம், பொற்றாமரைக் குளத்தருகே உள்ள கிளிக்கூண்டு மண்டபம், சங்கீத விநாயகர் கோவில் தெரு, தான் பிறந்து வளர்ந்து ஆளான வீடு, அந்த வீட்டுக்கூடத்தில் தான் தொழுவதற்கென்று ஒரு தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து மாலைசூட்டிமோதிரம் அணிவித்தது. நாட்டரசன் கோட்டையிலிருந்து கலியாணம் கச்சேரி முடிந்து திரும்பும்போது நிலா இரவில் சாலையோரம் குடிசையில் சந்தித்த 'சுகவாசத்துத் தம்பதிகள் எல்லாரும் தொடர்பாகவும், தொடர்பின்றியும், நனவு போலவும் கனவுபோலவும் மாறிமாறித் தோன்றினார்கள். கடிகாரம் மூன்று மணியடித்து ஒய்ந்தது. காற்றும் குளிரும் அதிகமாயின. வெளியே மழை வரும் போல மேகங்கள் கறுத்துக்கூடியிருந்தன. மறுபடியும் எங்கோ சேவல் கூவியது. பாரதி தூக்கத்தில் ஏதோ புலம்பித் தணிந்தாள். தோட்டத்து மல்லிகைப் புதரில் மங்கிய நட்சத்திரங்களைப் போல் பூக்கள் தெரியத் தொடங்கின. ஒவ்வொரு பூவாகக் கீழே உதிர்ந்து பவழ மல்லிகை மரத்தடியில் பாய் விரித்தாற்போல வெண்மை பரவித் தெரிந்தது. மேஜை விளக்கை அணைத்து விட்டுச் சாய்வு நாற்காலியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/673&oldid=595943" இலிருந்து மீள்விக்கப்பட்டது