பக்கம்:பொன் விலங்கு.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 675

சலிப்பாகத்தான் இருக்கிறது. முடிந்தால் நீ எனக்கு ஒரு உதவி செய். இதனோடு இருக்கும் மற்றொரு கடிதத்தை என் தெய்வத்திடம் சேர்த்துவிடு.தயவுசெய்து அவர்இந்த ஊரைவிட்டுப்புறப்படுவதற்கு முன் இதை அவரிடம் கொடுத்துவிடு. என்னுடைய தற்கொலைக்கு அவர் என்னைச் சந்தேகப்பட்டு வெறுத்தது மட்டும்தான் காரணம் என்று நீயாக எண்ணி அவரை ஒன்றும் கோபித்துக் கொள்ளாதே! நாங்கள் மேளதாளத்தோடு சந்தனம் வெற்றிலை பாக்குக் கொடுத்து ஊரறிய மணந்து கொள்ளவில்லையானாலும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம். அவருடைய மனைவியாகத்தான் நான் இப்போது சாகிறேன். அவருடைய மனைவி' என்ற பரிசுத்தத்துக்கு எந்தக் களங்கமும் ஏற்படுவதற்கு முன் நான் இந்த உலகிலிருந்து போய்விடுவது நல்லது.

இந்தத் தேசத்துப் பெண்கள் இறக்கும்போது சுமங்கலியாக இருக்கவேண்டுமென்று தவமிருப்பார்கள். நானோ பிடிவாதமாக அவருடைய சுமங்கலியாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்காகவே மகிழ்ச்சியோடு இறக்கிறேன். சாவதில் கூட மகிழ்ச்சி உண்டா என்று நீ கேட்கலாம்! வாழ்வதனால் அதை அடைய முடியாதபோது சாகாமல் வேறென்ன செய்ய முடியும்? முன்பு ஒரு சமயம் அவரிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். "நான் இறந்து போனால் என்னுடைய சிதையில் உங்கள் கையால் ஒரு முழம் பூவும் மஞ்சளும் குங்குமமும் போடுங்கள். அடுத்த பிறவியிலும் உங்களையே காதலித்து மணப்பதற்காக இந்தச் செளபாக்கியத்தை எனக்கு அளியுங்கள் என்னுடைய சடலம் மஞ்சள் குங்குமம் அழியாமல் பூவுடனும் பொலிவுடனும் கொழுந்துவிட்டு எரிகிறபோது நீங்கள் நிஜமான கருணையோடு அருகில் வந்து எனக்காக அழுதால், உங்களுடைய கண்களிலிருந்து இரண்டு சொட்டு நீர் நெகிழ்ந்து என் சிதையில் விழுந்தால், அந்தக் கடைசி விநாடிக் கருணையையே வாயிலாகக் கொண்டு ஞாபகமாகவும் பிடிவாதமாகவும், நான் அடுத்த பிறவியில் கூட உங்களையே நிச்சயமாகத் தேடிக்கொண்டு வந்துவிடுவேன்' என்று முன்பு நான் அவரிடம் வேண்டியபோது அந்த அமங்கலமான வேண்டுகோளுக்காக அவர் என்னைக் கண்டித்துக் கடிந்து கொண்டார். கோபித்தார். இன்றுள்ள மனநிலையில் அவர் என்னுடைய இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவாரா இல்லையா என்று எனக்கே தெரியாது இதனுடனிருக்கும் கடிதத்தில் இதைப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/677&oldid=595947" இலிருந்து மீள்விக்கப்பட்டது