பக்கம்:பொன் விலங்கு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"நாடாயிருந்தால் என்ன? காடாயிருந்தால் என்ன? மேடாயிருந்தால் என்ன? பள்ளமாயிருந்தால் என்ன? எங்கு உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ, அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் மண்ணே!"
- அவ்வையார்

வாழ்க்கையின் எல்லாவிதமான அழகுகளும் இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பமாகின்றன என்பது போல் அந்த மலைச் சிகரங்கள் அத்தனை அழகாக இருந்தன. அழகாயிருக்கிற எல்லாவற்றையும் உங்களால் இரசிக்க முடியுமானால் மல்லிகைப் பந்தல் என்ற பெயரின் அழகைக் கூட நீங்கள் நன்றாக இரசித்து அநுபவிக்க முடியும்தான். சாயங்காலம் ஆறு ஆறரை மணி சுமாருக்குச் சூட்கேஸும் கையுமாக 'மல்லிகைப் பந்தல் ரோடு' இரயில் நிலையத்தில் இறங்கிய முதல் விநாடியிலிருந்து இந்த விநாடி வரை சத்தியமூர்த்தி அந்தப் பெயரின் அழகைத்தான் இரசித்துக் கொண்டிருந்தான்.

மேலே மலைக்குப் போகிற கடைசிப் பஸ்ஸையும் கோட்டை விட்டு விட்டு இப்படி அந்தப் பெயரின் அழகையும் அந்த அழகின் தொலைதூரத்துச் சாட்சிகளாய்ச் சாயங்கால வானத்திலே மெல்லிய ஓவியக் கோடுகள் போல ஏறி இறங்கித் தெரியும் மலைகளையும் இரசிப்பதில் தனக்கென்ன இலாபம் என்று அவன் நினைக்கவில்லை. இன்னொன்றின் நலத்தைப் புரிந்து கொள்ள முயலும்போதோ, உணரும்போதோ சுயநலத்தை அளவுகோலாக வைத்து, இலாப நஷ்டம் பார்க்கும் வழக்கம் அவனிடம் என்றுமே இருந்ததில்லை.

இலாபகரமாகவோ செழிப்பாகவோ வாழ்ந்தும் அவனுக்குப் பழக்கமில்லை. தன்னுடைய கஷ்டங்களைச் சகித்துக்கொண்டே பிறருடைய இலாபங்களுக்காக நிறையச் சந்தோஷப் பட்டிருக்கிறான் அவன். முள் படுக்கையின் மேல் கால்நீட்டிப் படுத்துக் கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/7&oldid=1357808" இலிருந்து மீள்விக்கப்பட்டது