பக்கம்:பொன் விலங்கு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பொன் விலங்கு

"ஊர் வந்து விட்டாற்போல் இருக்கிறதே?...' என்று அந்த அம்மாள் தூக்கம் கலைந்த விழிப்பும், ஊர் வந்த விழிப்பும் போட்டி போட இரட்டை விழிப்புடனே எழுந்தபோது அவளிடம் எதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து அந்தக் கடுமையான முகத்தைப் பார்த்தபின் ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் தயங்கினான் சத்தியமூர்த்தி. அந்த அம்மாளின் முகத்தைப் பார்த்தால் அப்போது அவளிடம் தான் ஒன்றும் பேசாமல் விடைபெற்றுக் கொண்டு போய்விடுவதே நல்லது என்று தோன்றியது அவனுக்கு.

'உங்கள் பெண்ணிடம் நீங்கள் இன்னும் அதிகமான பாசத்தோடும்,கருணையோடும் நடந்து கொள்ளவேண்டும் அம்மா இப்படிக் கொடுமையாகவும், பரிவு இல்லாமலும் நடந்துகொள்வீர்களானால் என்றாவது ஒருநாள் உங்கள் பெண்ணை நீங்களே உயிரோடு பார்க்க முடியாமல் போய்விடும்..." என்று தொடங்கிக் கண்டிப்பாகவும் அந்த நேரத்தில் அதற்காகவே எடுத்துக்கொண்டாற் போன்ற ஒருவிதமான உரிமையுடனும் பேச எண்ணியிருந்தும் பேசப்பட வேண்டியவளுடைய முகத்தைப் பார்த்ததும் அவன் அதைச் செய்ய இயலாமல் போயிற்று. கண்ணீர் பெருகும் விழிகளால் சூட்கேஸைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகிவிட்ட அவனையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். பச்சையும் சிவப்புமாக நிறங்கள் கோடுகோடாகச் சிதறிக் கிடப்பதுபோல் உடைந்த வளைச் சில்லுகள் காலில் இடறின. போகும்போது இருவரில் யாரிடம் சொல்லிக்கொள்வதென்று ஒரு கணம் சிந்தித்த பின் இருவருக்கும் பொதுவாக வருகிறேன் என்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. அந்த ஒரு வார்த்தையைக்கூடச் சொல்லியிருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது. ஆனால் வருகிறேன் என்ற அந்த ஒரு வார்த்தைக்குப் பதிலும் சொல்ல முடியாமல், பதில் சொல்லாமலும் இருக்க முடியாமல் கண்ணில் பெருகும் நீரே தன் அந்தரங்கத்துக்குச் சாட்சியாக மெல்லத் தலையை அசைத்து விடை கொடுத்தாளே, அந்த ஒருத்திக்காக அதைச் செய்தது சரிதான் என்ற திருப்தியோடு பிளாட்பாரத்தில் இறங்கி நடந்தான் சத்தியமூர்த்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/70&oldid=595964" இலிருந்து மீள்விக்கப்பட்டது