பக்கம்:பொன் விலங்கு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - பொன் விலங்கு

சத்தியமூர்த்தி சாதாரண நாட்களில் இந்த மனிதரைத் தெருவில் எங்காவது சந்திப்பதற்கு நேர்ந்தால்கூட "பக்கத்தில் வராதே - விலகிப் போய்விடு..." என்ற பாவனையில் நீளமாக ஒரு கும்பிடு போட்டுஅனுப்பிய பின்பே நிம்மதியாக மூச்சுவிடுவான். திருவாளர் கண்ணாயிரம் பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கி வாழ்கிறவர். நெப்போலியனுடைய அகராதியில் முடியாது' என்ற வார்த்தை இல்லாதது போலத் திருவாளர் கண்ணாயிரம் அவர்களுடைய அகராதியில் பல நல்ல வார்த்தைகளுக்கு இடமே இல்லை. நியாயம், தர்மம், ஈவு, இரக்கம். இப்படி எத்தனையோ வார்த்தைகள் அவருடைய அகராதியில் இருக்க முடியாது. இந்த வகையில் நெப்போலியனை விடப் பெரியவர் அவர். கர்ணன் பிறக்கும் போதே காதில் மகர குண்டலங்களோடு பிறந்தமாதிரி அற்பத்தனத்தையும், வஞ்சத்தையுமே பிறவி அணிகலன்களாகக் கொண்டு பிறந்தவர் கண்ணாயிரம். அவர் இந்த உலகில் பிறக்கும் போதே மேற்படி கல்யான (?) குணங்களும் அவரோடு உடன் பிறந்துவிட்டன. இதெல்லாம் சத்தியமூர்த்திக்கு நன்றாகத் தெரிந்திருந்த காரணத்தினால்தான் திருவாளர் கண்ணாயிரத்தையும் அவருடைய அற்பத்தனத்தையும் அந்த அகாலத்தில் இரயில் நிலையத்துப் பிளாட்பாரத்தில் சந்தித்தபோது அவன் மிகவும் வருந்தினான். பாமரர்களும், சராசரி மனிதர்களும் இந்த உலகத்துக்குத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற பெரிய தியாகம் தங்களைவிடப் பாமரர்களாகவும், சராசரியானவர்களாகவும் இருக்கிறவர்களைப் பிரமுகர்களாக இருக்கும்படி அனுமதித்து அவர்களைத் தொடர்ந்து மன்னித்துக் கொண்டிருப்பதுதான். மீனாட்சிப் பட்டணத்துப் பெருமக்களால் இப்படி நிரந்தரமாக மன்னிக்கப்பட்டுவிட்ட பிரமுகர்தான் திருவாளர் கண்ணாயிரம்."மூன் லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸிஸ் என்ற மாபெரும் விளம்பர ஏற்பாட்டுக் கம்பெனி ஒரு சிறிய மூன்றே முக்காலடி அறைக்குள் இரு நாற்காலிகளிலும் ஒரு மேஜையிலும் அடங்கிப் போய்விட்டாலும் அந்தப் பேரை வைத்துக் கண்ணாயிரம் பிரமாதப்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்காக நல்லவர்கள் பயப்பட்டார்கள்; விட்டுக்கொடுத்தார்கள் - பொல்லாதவர்கள் துணையிருந்தார்கள், ஒத்துழைத்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/72&oldid=595966" இலிருந்து மீள்விக்கப்பட்டது