பக்கம்:பொன் விலங்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பொன் விலங்கு

"நீ போன காரியம் என்ன ஆயிற்று?"

'இண்டர்வ்யூ ஆயிற்று. முடிவு ஒன்றும் சொல்லவில்லை. விவரம் தெரிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்."

"இண்டர்வ்யூவின் போது நீ சரியாக நடந்து கொண்டாயோ இல்லையோ?" -தந்தையின் இந்தக் கேள்விக்குச் சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லவில்லை. கடந்த சில மாதங்களில் தொடர்ந்து நாலைந்து இண்டர்வ்யூவுக்குப் போய்விட்டு ஒரு விளைவும் இல்லாமல், திரும்பி வந்ததிலிருந்து அப்பாவுக்குத் தன்மேல் இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருப்பது அவனுக்குத் தெரியும். போகிற இடங்களில் தான் அகம்பாவத்துடனோ, அலட்சியமாகவோ நடந்து கொள்வதனால்தான் வேலைகள் கிடைக்காமல் தட்டிப்போய்க் கொண்டிருக்கின்றனவோ என்று அவர் சந்தேகப்படுவதைக் கண்டு அவனுக்கு அவர்மேல் கோபமோ, மனத்தாங்கலோ உண்டாக வில்லை. அவரைப் போல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு நைந்தவர்கள் அப்படித்தான் நினைக்க முடியும் என்பதை உணர்ந்து பொறுமையா யிருந்தான் அவன்.

நான் அப்போதே படித்துப் படித்துச் சொன்னேன், நீ கேட்டால்தானே? தமிழ் ஆணர்லைத் தவிர வேறு எந்தப் பிரிவில் சேர்ந்திருந்தாலும் இதற்குள் நல்ல உத்தியோகத்தைத் தேடிக்கொண்டு போயிருக்கலாம். இந்த வீட்டு நிலைமை நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. மாடியிலும் கீழே முன்பக்கத்து அறையிலுமாக ஒண்டுக்குடித்தனம் இருக்கிற இரண்டு பேருமாக நூறு ரூபாய் வாடகை தருகிறார்கள். இந்தத் தள்ளாத வயதிலும் நான் டியூஷன் சொல்லிக் கொடுப்பதற்கு அலைந்து நூறு ரூபாய்க்குத் தேற்றுகிறேன். மாடியில் மழைக்கு ஒழுகுகிறது. இப்போது இருக்கிறவர் காலி செய்துவிட்டால் மறுபடியும் காலியாகி விடும். மாடியில் கொஞ்சம் இடித்துக் கட்டினாலொழியத் தொடர்ந்து யாரையும் குடியிருப்புக்கு வைக்க முடியாது. எல்லாவற்றுக்கும் பணம் வேணும்டா பணம். சும்மா...வறட்டு இலட்சியம் பேசி ஆகப் போவது ஒன்றுமில்லை. திருமணத்துக்கு நிற்கிற இந்தப் பெண்களையும் வீட்டுக் கவலைகளையும் நினைத்து இராப்பகலாக நான் தூக்கமின்றி மாய்வது உனக்குத் தெரியுமோ? எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்கப் போகிறாய் நீ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/78&oldid=595972" இலிருந்து மீள்விக்கப்பட்டது