பக்கம்:பொன் விலங்கு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பொன் விலங்கு

பிரியமுற்று அழுந்தி நிற்கும் போதுகளில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதியாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள். அதைப் பங்கிட்டுக் கொள்ளவோ அதற்கு ஆதரவு தேடவோ சரியான துணை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வேளையில் பாரதியும் அப்படித் துணையற்றவளாகத்தான் இருந்தாள். அப்போது அவளுடைய அந்தரங்கத்தில் என்ன இருந்ததோ அதை அவள் இன்னொருவரிடம் சொல்லமுடியாது.

சத்தியமூர்த்தியை இண்டர்வ்யூ செய்த அதே பதவிக்காக விண்ணப்பம் போட்டிருந்த மற்றொருவரையும் இண்டர்வ்யூ" செய்து கொண்டிருந்த பூபதி அவர்களோ அப்போது தாம் செய்யும் காரியம் தமக்கு மிக அருகேயுள்ள மென்மையான மனம் ஒன்றைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நியாயமில்லை. முறையாகவும், ஆர்வம் குன்றாமலும் வழக்கம்போல அந்தப் பதவிக்காக வந்திருந்த இரண்டாவது விண்ணப்பதாரரையும் விசாரித்துக் கொண்டிருந்தார் அவர். நிர்வாகத் துறையில் அது ஒரு முக்கியமான அம்சம். ஒரு பதவிக்கு மனுச் செய்திருக்கிறவர்கள் பலராக இருந்தால் அப்படிப் பலர் மனுச் செய்திருக்கிறார்கள் என்பதே தெரியாமல் ஒவ்வொருவரையும் வெவ்வேறு நேரங்களில் வரச்சொல்லி எல்லாரிடமும் ஒரேவிதமான ஆர்வத்தோடு பேசி எல்லாரிடமும் ஒரேவிதமான ஆர்வத்தோடு விசாரித்து வந்து செல்கிற ஒவ்வொருவரும் அந்தப் பதவி தங்களுக்கே கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு போகும்படி செய்துவிட்டு இறுதியில் காதும் காதும் வைத்தாற்போல் இரகசியமாக உண்மைத் தகுதியைக் கண்டுபிடித்து நியமனம் செய்வார்கள். தொழிலதிபர் பூபதியே நிர்வாகத் துறையில் நிபுணர். சில வேளைகளில் அவருடைய சாமர்த்தியங்கள் சிலர் அனுமானம் செய்ய முடிந்த எல்லைக்கு அப்பாலும் உயர்ந்திருக்கும். தங்கம் நிறுப்பதுபோல் எதிராளியை மாற்றுக் குறையாமல் கூடாமல் கச்சிதமாக எடைபோட்டு அளந்து நிறுத்தத் தெரிந்து கொண்டு அவ்வாறு தான் நிறுத்துத் தெரிந்துகொண்டுவிட்டதை நிறுத்தப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/82&oldid=595977" இலிருந்து மீள்விக்கப்பட்டது