பக்கம்:பொன் விலங்கு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 83

மீசையும் முரட்டுப் பார்வையுமாக வீற்றிருந்த மனிதர்தான் சத்தியமூர்த்தியின் பதவிக்குப் போட்டியாக வந்தவராக இருக்கவேண்டும் என்று அவளால் அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. அந்த மனிதருக்கு ஐம்பது வயதுக்கு இரண்டொன்று குறைவாகவோ, கூடவோ இருக்கலாம் என்று தோன்றியது. பதவிக் காலம் முடிந்து ஒய்வு பெறுவதற்குச் சில ஆண்டுகளே

இருக்கும்போது ஏற்கெனவே வேலை பார்க்கிற இடத்திலேயே தொடராமல் இந்த மனிதர் சத்திய மூர்த்திக்குப் போட்டியாக இங்கு ஏன் வரவேண்டும், என்று நினைத்து ஒரு பாவமும் அறியாத அந்த மூன்றாம் மனிதர்மேல் கோபப்பட்டாள் அவள். வயதானவராகவும், முன் அநுபவம் உள்ளவராகவும் இருக்கிறார் என்ற காரணங்களால் தன் தந்தையே இந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து விடுவாரோ என்ற பயமும் அவள் மனத்தில் பற்றியிருந்தது. எது நடக்கும், எது நடக்காது என்று முடிவாகத் தெரிந்துகொள்ள இயலாத அந்த நிலையில் பொறுமையிழந்து போய்த்தவித்தாள் பாரதி. ஞாபகத்தின் எல்லாப் பக்கங்களும் ஒரே நினைவில் ஆரம்பமாகி ஒரே நினைவில் முடிந்தாற்போல் அந்த ஒரே ஒரு நாளில் தான் அவ்வளவு பெரிய பைத்தியமாக ஆனது எப்படி என்று எண்ணித் தன்னைத்தானே வியந்து கொண்டாள் அவள்.

சத்தியமூர்த்தியை இண்டர்வ்யூ செய்தபோது தன் தந்தையும் கல்லூரி முதல்வருமே இருந்ததுபோல் அல்லாமல் இப்போது ஹெட்கிளார்க் வேறு புதிதாக வந்திருப்பது அவளுடைய சந்தேகத்தை வளர்த்தது. ஒரு வேளை ஹெட்கிளார்க்கினிடம் சொல்லி இந்த மனிதருக்கு நேரிலேயே கொடுத்து விடுவதற்காக ஆர்டர் டைப் செய்ய ஏற்பாடாகிறதோ? என்று பயப்படுவதற்குரிய சந்தேகம் ஒன்றைத் தானாகவே நினைவிற் கற்பித்துக் கொண்டது அவள் மனம். எதை எதையோ எண்ணி மனம் குழம்பினாள் அவள். காலையில் தன் தந்தையும் சத்தியமூர்த்தியும் பேசிக் கொண்டிருந்த பேச்சின் முடிவில் இந்தக் கல்லூரிக்கு இதுவரை பேராசிரியர் களாகவும், விரிவுரையாளர்களாகவும் வந்திருக்கிற அத்தனை பேரிலும் நீங்கள் ஒருவர்தான் மிக இளமைப் பருவத்தினராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது என்ற வார்த்தைகளைச் சத்திய மூர்த்தியிடம் தன் தந்தை சொல்லிவிட்டுத் தயங்கியதையும் இந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/85&oldid=595980" இலிருந்து மீள்விக்கப்பட்டது