பக்கம்:பொன் விலங்கு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 85

முயலும்போது சிறிதும் மகிழ்ச்சியைத் தரமுடியாத ஏதோ ஒரு சந்தர்ப்பம் மட்டும் நினைவில் முந்திக்கொண்டு பாய்ந்து வந்தது. மனம் அதற்கு உடைமைக்காரர்களோடு ஒத்துழைக்காத நேரங்களில் இதுவும் ஒன்று நினைக்க விரும்புவது எதுவோ அது நினைவில் வந்து பதியாமல் நினைக்க விரும்பாததும் நினைக்கக் கூடாததும் நினைவு வந்தால் வேதனை தரக்கூடியதுதான். ஏதோ ஒன்று மட்டுமே நினைவு வந்து சந்தோஷகரமான மற்றவற்றின் வரவை வழியடைத்துக் கொள்கிற நுணுக்கமான துயரத்தை மீற முடியாது தவித்தாள் அவள்.

அன்று காலையில் இண்டர்வ்யூ முடிந்தபின் தன் தந்தையும் அவரும் வேறு எதையோ பற்றி உரையாடிக் கொண்டிருக்கையில், 'நான்தான் இனிமேல் இந்த ஊருக்கே வந்து விடப் போகிறேனே என்று அவர் புன்முறுவலோடு கூறியபோது "நீங்கள் இங்கே வரவேண்டுமென்றே இன்னும் அதிகாரபூர்வமாக நாங்கள் தெரிவிக்கவில்லையே? -என்று தந்தை சிரித்தபடியே மறுத்த சம்பவம் நினைவில் வந்தது அவளுக்கு. இரண்டு பேருமே வேடிக்கையாகப் பேசிக் கொண்டார்கள் என்று அந்தச் சம்பவத்தைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முயன்றாலும் அதுவே திரும்பத்திரும்ப அவள் நினைவில் வந்து அதற்கு அப்பால் வரக் காத்திருந்த மற்ற நம்பிக்கைகளின் பாதையை மறிக்கலாயிற்று. மனத்தின் பலவீனமான வேளைகளில் இதுவும் ஒன்று. ஓர் அவநம்பிக்கை பத்து நம்பிக்கைகளை மறைத்துவிட முடிகிறது. அல்லது மறக்கச் செய்ய முடிகிறது. பத்து நம்பிக்கைகள் சேர்ந்து ஒர் அவநம்பிக்கையை மறைத்துவிட அல்லது மறக்கச் செய்துவிட முடிவதில்லை. அந்த நேரத்து இதயத்தின் தவிப்பில் அவள் இதை நன்றாக உணர முடிந்தது. சத்தியமூர்த்தியே அந்தப் பதவிக்கு உரியவனாக நியமிக்கப் பெற்று மறுபடி மல்லிகைப் பந்தலின் மண்ணில் அவனைக் கண்டாலொழிய அந்த ஊரே பொலிவில்லாமல் போய் விடும் போல் அவள் உருகித் தவித்தாள். இப்படி எதற்காகவும் அவளுடைய வாழ்க்கையில் அவள் இதுவரை தவிக்க நேர்ந்ததில்லை. இந்த அநுபவம் அவளுக்கு ஏற்படுவது இதுவே முதல் தடவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/87&oldid=595982" இலிருந்து மீள்விக்கப்பட்டது