பக்கம்:பொன் விலங்கு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 87

வதானால் அந்த நிலையில் அவளால் அவற்றை நினைக்காமல் இருக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

'பாதங்கள் மட்டுமென்ன? முகம், உதடுகள், உள்ளங்கைகள் எல்லாமே ரோஜாப் பூக்களாகத்தான் அவருக்குவாய்ந்திருக்கின்றன. அவருக்கென்றே வாய்த்த நிறமா அது? என்று எண்ணி அந்த எண்ணத்தின் விளைவாகத் தனக்குத்தானே கூச்சமுற்று நாணினாள் sojøT.

காரில் தன்னுடன் வரும்போது, 'உங்கள் ஊரில் மல்லிகைப் பூக்களின் வாசனையை எப்படிப் புகழ்வதென்றே தெரியவில்லை' என்று சத்தியமூர்த்தி கூறியிருந்த சொற்கள் இப்போது ஞாபகம் வந்தன. அதைக் கருத்தில்கொண்டு அப்போது தான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள குடை மல்லிகைச் செடியிலிருந்து இரண்டு பூக்களைப் பறித்துக் கூந்தலில் சொருகிக் கொண்டாள் பாரதி. அந்தப் பூக்கள் இரண்டும் அவற்றைச் சார்ந்த நினைவுமாக இணைந்து அதிகமாய் மணப்பது போல் இருந்தது. இலைகளே இல்லாமல் செடி முழுவதும் பூக்களே நிறைந்த ஒரு ரோஜாச் செடியைக் கற்பனை செய்து கொண்டு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சத்தியமூர்த்தியின் பொன் மேனியையும் கற்பனை செய்யத் தோன்றியது அவளுக்கு. மல்லிகைப் பந்தல் என்ற மலை நாட்டு நகரத்தின் செம்மண் நிலம் மழை பெய்ததன் காரணமாக அன்று எப்படி நெகிழ்ந்து போயிருந்ததோ அப்படியே சத்திய மூர்த்தியைப் பற்றிய நினைவுகளால் அவள் மனமும் நெகிழ்ந்து போயிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் அவள் பைத்தியமாகியிருந்தாள். தோட்டத்திலிருந்து வீட்டுக்குள்ளே போய் மறுபடியும் அவள் தன் தந்தையின் அறையருகே சென்றபோது இண்டர் வியூவுக்கு வந்திருந்த மீசைக்காரர் விடைபெற்றுக் கொண்டிருந்தார். அவரை அனுப்பிவிட்டுத் தந்தையும், முதல்வரும், ஹெட் கிளார்க்குமாக ஏதோ பேசி விவாதிக்கத் தொடங்கவே அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்பதற்காகப் பாரதி திரை ஓரமாக நாற்காலியை எடுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள். நிச்சயமாக அவர்கள் அப்போது ஆலோசனை செய்து விவாதிக்கிற விஷயம், 'தமிழ் விரிவுரையாளராக யாரை நியமிப்பது? என்பதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/89&oldid=595984" இலிருந்து மீள்விக்கப்பட்டது