பக்கம்:பொன் விலங்கு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பொன் விலங்கு

இருந்தது. சத்தியமூர்த்தி துடுக்குத்தனமாக எதிர்த்துப் பேசியது தன் தந்தையின் மனத்தைப் பாதித்திருந்தாலும் அவருடைய திறமைகளைத் தந்தை ஓரளவு புரிந்து கொண்டு மதிப்பதை அவள் இப்போது தெரிந்து கொண்டு விட்டாள். 'பிரின்ஸிபல் பிடிவாதமாக இருந்து காரியத்தைக் கெடுத்து விட்டால்?' என்ற கேள்வி எழுந்தபோது அவளுக்கு ஒரே மலைப்பாயிருந்தது. இந்த நிலையில் சத்தியமூர்த்திக்காக ஏங்கும் அவள் மனம் சுறுசுறுப்பாகச் சிந்தனை செய்தது. தந்தையின் மனத்தில் இப்போதே சத்தியமூர்த்தியின் தகுதியைப் பற்றி முக்கால் வாசி நல்ல அபிப்பிராயம் நிறைந்திருக்கிறது. நிறையாமல் இருக்கிற மீதிக் கால் பகுதியையும் எப்படியாவது நிறையும்படி செய்துவிட்டால் கவலை இல்லை. யாருக்கு ஆர்டர் கொடுப்பது என்பதைப் பற்றி அவர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அவர்கள் இனி என்ன முடிவு செய்யப் போகிறார்களோ? என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் இந்த வினாடி வரை அவர்கள் ஒரு முடிவும் செய்யவில்லை என்பதே ஒரு திருப்தியாயிருந்தது அவளுக்கு. அந்தக் கல்லூரியிலும் அதன் இலட்சியங்களிலும் பரிபூரணமான ஆர்வமுள்ளவர்களும், நம்பிக்கை உள்ளவர்களுமே அங்கு வேலைக்கு வரவேண்டுமென்று தாம் எதிர்பார்ப்பதாகக் கல்லூரி விழாக்களில் தலைமையுரையாற்றும் சந்தர்ப்பங்களில் பலமுறை தன் தந்தை பேசியிருப்பதை அவளே கேட்டிருக்கிறாள். தனக்கு அங்கு வரவேண்டுமென்ற ஆர்வம் மெய்யாகவே இருப்பதாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு விடைபெறும் போது சத்தியமூர்த்தி தன்னிடம் கூறியதை நினைத்துக் கொண்டாள் பாரதி. தானே அவருக்கு ஒரு கடிதம் எழுதி நீங்கள் மெய்யான ஆர்வமும் இலட்சியமும் கொண்டுதான் இந்தக் கல்லூரிக்குப் பணியாற்ற வர விரும்புவதாகவும், என் தந்தையின் கல்விப்பணியில் உள்ள புனித இலட்சியங்களைப் பாராட்டுவதாகவும் அவருக்கு நேரடியாக ஒரு கடிதம் எழுதுங்கள்! நான் இங்கிருந்து தூண்டி எழுதச் சொல்லியதாகத் தெரிய வேண்டாம், நீங்களாகவே ஊர் திரும்பியதும் அவருக்கு எழுதுவதுபோல் உடனே எழுதுங்கள். இது மிகவும் அவசியம்' என்பதைத் தெரிவிக்கலாமா என்று எண்ணினாள். முன்பின் தெரியாது ஒரேஒரு நாள் பழகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/92&oldid=595988" இலிருந்து மீள்விக்கப்பட்டது