பக்கம்:பொன் விலங்கு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பொன் விலங்கு -

நீளும் ஒற்றையடிப் பாதையினைப்போல் நடுவே வெள்ளிக் கோடாய் மினுக்கும் நேர்வகிட்டில் ஓர் அழகு - என்று இப்படி ஒவ்வொன்றாய் விரல் விட்டு எண்ணுகிற பல அழகுகளுக்கும் இடமாயிருக்கும் ஒரே ஓர் அழகாக அவள் நிற்பதை அவன் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் அவனுடைய மனத்தின் கோபம் முழுமையாக அடங்கவில்லை. 'இப்போது என்ன காரியமாக என்னைத் தேடிவந்தீர்கள் இங்கே?' என்று சத்தியமூர்த்தி அவளைக் கேட்ட கேள்வியில் இப்படி இந்த நிலையில் இங்கே என்னைத் தேடிவந்திருக்கவேண்டாம் என்றோ வந்திருக்கக்கூடாது என்றோ தான் அபிப்பிராயப்படுகிற கடுமை கேட்கப் படுகிறவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி தொனித்தது. 'ஒன்றுமில்லை! இதை உங்களிடம் கொடுத்துவிட்டுப் போக வந்தேன், இரயிலில் தவற விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள்' என்று அவனுடைய பேனாவை எடுத்து நீட்டினாள் அவள். அப்போது அவள் எதற்காக அங்கே வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்டு பேனாவை அவள் கையிலிருந்து வாங்கிக் கொண்டபோது சற்று முன்பு தான் அவளைக் கேட்டிருந்த கேள்வியின் கடுமைக்காக நாணினான் சத்தியமூர்த்தி. கண்ணாயிரம் காரின் அருகிலேயே நின்றுகொண்டு விட்டார். அந்த முதிய அம்மாள் காருக்குள்ளேயிருந்து கீழே இறங்கவேயில்லை. வீட்டு வாசலில் சத்தியமூர்த்தியும் அந்தப் பெண்ணும்தான் தனியே நின்று கொண்டிருந்தார்கள். அவன் அவளுடைய உதவிக்காக நன்றி கூறினான். 'பேனாவை இரயிலில் தவற விட்டுவிட்டு எப்படி ஞாபகக் குறைவாக வீடு வந்துசேர்ந்தேனென்று எனக்கே தெரியவில்லை. நல்ல வேளையாகக் காப்பாற்றிக் கொண்டுவந்து கொடுத்து விட்டீர்கள். நிரம்ப நன்றி..."

'வெறும் பேனாவைக் காப்பாற்றிக் கொடுத்ததற்கே இவ்வளவு நன்றியானால் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தவர்களுக்கு எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்" என்று சொல்லிச் சிரித்தாள் அவள். இப்படி இந்த வாக்கியத்தைச் சொல்லுவதற்குரிய சாமர்த்தியம் அவளிடம் இருந்ததை இரசித்தான் சத்தியமூர்த்தி. அழகிய இதயத்திலிருந்துதான் அழகிய வாக்கியங்கள் பிறக்க இயலுமென்று சில சமயங்களில் அநுமானம் செய்ய முடியும். முகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/96&oldid=595992" இலிருந்து மீள்விக்கப்பட்டது