6
பொய்ம் முகங்கள்
திடீரென்று ஆசிரியர்கள் ஓய்வு அறையான ‘ஸ்டாஃப் ரூமு’க்கு வந்த போது, சுதர்சனன், தான் வழக்கமாக உட்காரும் வேப்ப மரக் காற்று வருகிற ஜன்னலோரமாக அமர்ந்து கவிதை எழுதிக்கொண்டிருந்தான். அவர் உள்ளே நுழைந்ததைக் கூட அவன் கவனிக்கவில்லை. மற்ற ஆசிரியர்களில் யார், யார் அப்போது ஆசிரியர் ஒய்வு அறையில் இருந்தார்களோ, அவர்கள் எல்லாரும் அவரைப் பார்த்ததும், மரியாதையாக எழுந்து நின்றிருக்க வேண்டும். எல்லாரையும் விட வயதில் இளையவனும், புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த தமிழாசிரியனும் ஆகிய அவன், தம்முடைய வரவையே கவனிக்காதது போல், குனிந்து எழுதிக் கொண்டிருந்தது தலைமையாசிரியருக்கு ஆத்திரமூட்டியது. அவர் சரியாகத் தன் பின்னால் வந்து நின்று கொண்டு, தான் எழுதிக் கொண்டிருப்பதைப் படிக்க முயன்ற போது கூட, அவன் அவர் வந்து தன் பின்னால் நிற்பதைக் கவனிக்கவில்லை.
“இதென்ன பள்ளிக்கூடமா ,சந்தை மடமா?”
அவர் திடீரென்று சத்தம் போட்டு இரைந்த பின்புதான், அவனுடைய கவனம் திரும்பியது. பதறிப் போய் எழுந்து நின்றான் சுதர்சனன்.
“மிஸ்டர் சுதர்சனன்! ஸ்கூல்லே ஒவ்வொருத்தருக்கும் ‘லீஷர் பீரியட்’ எதுக்காகக் குடுக்கிறாங்க தெரியுமா?”
“… … …”
“பையன்களோட காம்போஸிஷன் நோட்டு, ஹோம் ஒர்க், எதையாவது ‘கரெக்ட்’ பண்றதுக்குத்தான் இந்த லீஷர். நீர் கவிதை எழுதறத்துக்காகவோ, கதை எழுதறதுக்காகவோ இங்கே நாங்க சம்பளம் கொடுக்கலே! ஞாபகமிருக்கட்டும்.”
இப்படிக் கூப்பாடு போட்டு இரைந்து விட்டு, அவன் பதிலை எதிர்பார்த்துக் காத்திராமலே, விருட்டென்று திரும்பிப் போய் விட்டார் தலைமை ஆசிரியர்.
அந்தச் சம்பவம் தொடர்புள்ள கோபமும், ஆத்திரமும் இன்னும் அவர் மனதில் அப்படியே நீடிக்கிறது என்று