பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரடியாகவும் பொருண்மைக் குழப்பம் ஏதுமின்றியும் உரிய முறையில் உரியவரைச் சென்றடையும். எனவே, அறிவியல் கருத்து வெளிப்பாட்டிற்குத் தேவையான கலைச்சொற்களை உருவாக்குவதும் அவற்றைப் பரவலாக்கத்திற்குக் கொண்டு வருவதும் அறிவியல் தமிழ் உருவாக்கத்தில் இன்று விரைந்து மேற்கொள்ள வேண்டிய தேவையான ஆக்கப்பணிகளாகும். தொடக்க காலத்தில் எழுத்துப்பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு முறைகளில் இத்தகைய கலைச்சொல்லாக்கப் பணி அமைந்து வந்தது. எடுத்துக்காட்டாக 'Oxygen' என்பதைத் தொடக்கத்தில் 'ஆக்ஸிஜன்' என்றும், அதனைத் தொடர்ந்து பிராணவாயு, உயிர்வாயு என்று மொழி பெயர்த்தும் பிறமொழிக் கலப்போடும் எழுதி வந்த நிலை மாறிப் பின்னர் உயிர்வளி என்று நிலைபேறாக்கம் செய்ததையும் கலைச் சொல்லாக்க வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு தமிழாக்கமும், தமிழில் கலைச்சொல் உருவாக்கமும் நிலைபேறாக்கம் செய்யப்பட்டால் அது உண்மையிலேயே மொழிப்பயன்பாட்டின் ஆற்றலைப் பெருக்கும் என்பதில் ஐயமில்லை. மொழியின் தனித்தன்மையும் பண்பும் சிறப்பாகப் பேணப்படுவதற்கும் இம்முறை வழிவகுக்கும். கலைச்சொல்லாக்கம் முக்கியமான பணி என்றாலும் கலைச் சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் பாடநூல்களை உருவாக்கும் பணியே நம்முடைய சிறப்புநிலைக் குறிக்கோளாகும். எனவே, அறிவியல் கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ற மொழி நடையை வரையறை செய்து பாடநூல்களை உருவாக்கும் பொழுது, அறிவியல் கருத்து வெளிப்பாடு இயல்பாகவும் ஆற்றல் பெற்றும் விளங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனை மையப்படுத்தியே இன்று அறிவியல் உரைக்கோவையும் (Scientific Discourse) அறிவியல் மொழிநடையும் எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல் கலை சொல்லாக்கப் பணியை 1983 -இல் தொடங்கிப் பல்வேறு அறிவியல் துறைசார் கலைச் சொற்களை உருவாக்கி அவற்றை நிலைபேறாக்கம் செய்து ஆறு தொகுப்புகளாய் வெளியிடுகிறது. இத்தொகுப்புகள் அறிவியல் கல்வி வளர்ச்சிக்கும் அறிவியல் கருத்துப் பரவலாக்கத்திற்கும் தொடர்புள்ள பிற கல்வி ஆய்வுப் பணிகளுக்கும் பெரிதும் துணைபுரியும் என்று எதிர்பார்க்கலாம். நாள் : 21-04-1997 கி.கருணாகரன்