பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




4. துப்பறியும் துரை

இருக்கின்ற அனைவரையும் இந்த விளையாட்டில் பங்கு கொள்ளச் செய்யலாம். விளையாட்டில் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு பெரிய வட்டம் போட்டு அதற்குள்ளே வந்து அனைவரையும் நிற்குமாறு செய்யவேண்டும்.

யார் யார் எந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்பதை ஒவ்வொருவரும் நன்றாகப் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மனதில் பதிய வைத்துக் கொண்டால்தான், இந்த ஆட்டத்தை உற்சாகமாகவும், வெற்றிகரமாகவும் விளையாடி மகிழ முடியும்.

பங்கு பெறுபவர்களில் ஒருவரை துப்பறியும் துரையாகத் தேர்ந்தெடுத்து, அவரை தனியே வட்டத்திற்கு வெளியே கொண்டு வந்து நிறுத்தி, பிறகு வட்டத்திற்குள் அழைத்துச் சென்று நடு இடத்தில் நிற்க வைக்க வேண்டும். பின்னர் அவரது கண்களை ஒரு கைக்குட்டையால் கட்டி மறைத்திட வேண்டும்.