பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதம பிக்கு ⚫ 323

அந்த நேரத்தில் அங்கே காவியுடை அணிந்து, வில்லேந்திய வேடன் ஒருவன் வந்து சேர்ந்தான். அவனுடைய உடைக்கும் கையிலேந்திய வில்லுக்கும் பொருத்த மில்லையே என்று சித்தார்த்தர் பார்த்துத் திகைத்துக் கொண்டிருந்தார். அந்த விவரத்தை வேடனே விளக்கிச் சொல்லி விட்டான். சீவர உடையைக் கண்டால் தன்னைத் துறவி என்று எண்ணி வன விலங்குகள் விலகி ஓடாமல் நிற்கின்றன என்றும், அதனால் தான் வேட்டையாட எளிதாகிறது என்றும் அவன் கூறினான். இளவரசரின் வெண்பட்டு உடையைப் பார்த்து, அவர் இந்திரன் போல விளங்குவதாக அவன் எண்ணினான். அவ்வேடனுடைய காவி ஆடையிலேயே அவருடைய கண்கள் பதிந்திருந்தன. ‘நாம் இருவரும் உடைகளை மாற்றிக் கொள்வோமா?’ என்று இளவரசர் வேடனைக் கேட்டார்.

உடனே அவனும் அதற்கு இசைந்து, காஷாயத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டு, அவருடைய உடையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மறைந்து விட்டான். அவன் போகுமுன்பு, உயிர்வதை பாவம் என்று சித்தார்த்தர் அவனுக்கு உபதேசம் செய்தனுப்பினார். அவ்வேடனும் ஒரு தேவன் என்று வரலாறுகள் கூறுகின்றன.

காவியுடையுடன் சித்தார்த்தர் சந்தகனுக்கு விடை சொல்லி விட்டு அருகேயிருந்த ஆசிரமத்தை நோக்கி நடக்கலானார். அவருடைய திருக்கோலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தகன், துக்கம் தாங்காமல், தன் கண்களை என்ன செய்யலாம் என்று அறியாமல், அழுது அரற்ற ஆரம்பித்தான். பிறகு குதிரையை அணைத்து அழைத்துக் கொண்டு, அவன் நகரை நோக்கித் திரும்பினான். வழியெங்கும் அழுதல், அழுங்குதல், அரற்றுதல் ஐயனை எண்ணிப் புலம்புதலோடு, அடிக்கடி தவறி விழுந்து கொண்டே அவன் சென்றான். அவனுடைய உடல் தான் நடந்து கொண்டிருந்ததேயன்றி, ஆவி