பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதம பிக்கு ⚫ 107

யிற்றோ, அதே ஆனந்தம் இப்போதும் உண்டாகின்றது. உங்களைப் பிரிவதில் எனக்கும் துக்கந்தான். ஆனால் என் இலட்சியத்தை அடைய வெளியே தான் செல்ல வேண்டியிருக்கின்றது. உங்களுடைய குறிக்கோள் சுவர்க்கம்; எனது குறிக்கோள் பிறப்பை அறுத்தல். இரண்டும் வேறுபட்ட இலட்சியங்கள்!’ என்று அவர் தம் கருத்தைத் தெளிவுபடுத்திக் கூறினார்.

சடையும் தாடியும் வளர்த்து, மரவுரிகளை அணிந்து, ஊன் வாட வாடத் தவம் செய்து கொண்டிருந்த அம் முனிவர்களைப் பரிவோடு நோக்கி, அவர் தமக்கு விடையளிக்கும் படி வேண்டினார்.

அப்போது அங்கேயிருந்த வேதியர் ஒருவர், சித்தார்த் தரை வாழ்த்தி, அவருடைய குறிக்கோள் மிக்க சிறப்பு டையது என்றும், அவர் மேற்கொண்டு விந்திய கோஷ்தானத்தில் பெருந்தவமியற்றி வந்த ஆலார காலாமரிடம்[1] போய் உபதேசம் பெறுமாறு யோசனை கூறிவிட்டு, ‘அவருடைய போதனையில் உமக்கு விருப்பமிருந்தால், அதனை நீர் ஏற்றுக் கொள்வீர். ஆனால் பின்னால் அவருடைய தத்துவத்தையும் கடந்து நீர் செல்ல வேண்டியிருக்கும் என்றே எனக்கும் தோன்றுகிறது. இதுவரை, முந்திய யுகங்களிலேயும், மகரிஷிகள் அடையாத மெய்ஞ் ஞானத்தைப் பெற்று, நீர் உலகின் ஞான தேசிகராக விளங்கப் போகிறீர்!’ என்றும் சொன்னார்.

‘ நல்லது, அவ்வாறே செய்கிறேன்!’ என்று சொல்லி விட்டுச் சித்தார்த்தர் முனிவர் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.


  1. ஆராள ராமர் - ஆராதர், ஆராட ருத்திர ராமர் முதலிய வேறு பெயர்களாலும் இவர் குறிக்கப் பெற்றிருக்கிறார். ஆனால் புத்தர் பெருமான் ‘ஆலார காலாமா’ என்றே கூறியுள்ளார்.