பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 ⚫ போதி மாதவன்

‘சுவர்க்கத்தில் எனக்கு ஆசையில்லை. வைராக்கியத்தோடு முயன்றால், சாதாரண மக்கள் கூட அதை அடைய முடியும். இம்மையிலும் மறுமையிலும் என் நாயகனைப் பிரியாமலிருப்பது ஒன்றையே நான் விரும்பினேன். அவரே எனக்குத் துரோகம் செய்து விட்டாரே?’ என்று புலம்பினாள். ‘பகைவரையும் பரிவு கொள்ளச் செய்யும் இந்தப் பச்சைக் குழந்தையையும் பரிதவிக்க விட்டுச் சென்ற அவர் உள்ளம் இரும்பாகத்தான் இருக்க வேண்டும்! என் செல்வர் சென்றுவிட்டார் என்றதைக் கண்ட பின்னும், இன்னும் உடைந்து சிதறாத என் உள்ளமும் பாறையாகவோ, இரும்பாகவோதான் இருக்க வேண்டும்!’ என்று தன்னையும் நொந்து கொண்டாள்.

கன்றைப் பிரிந்த கற்றாவைப்போல் அன்னை கௌதமி துடித்துக் கொண்டிருந்தாள், சீத மதிக் குடையின் கீழே சிம்மாசனத்தில் இருக்க வேண்டிய உடல் வனத்திலே வாடுவதை அவளால் சகிக்க முடியவில்லை சித்தார்த்தருடைய உடலழகுகளைப் பற்றி எண்ணி எண்ணி உருகினாள். ‘அந்தத் தருமமூர்த்தியை அரசனாகப் பெறுவதற்குப் பூமாதேவிக்குப் பாக்கியமில்லை! குடிகளுக்கும் அத்தகைய அரசனை அடையத் தகுதி யில்லாமற் போய் விட்டது!’ என்று அவள் புலம்பினாள்.

அரசரோ தமது சோகத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு மைந்தன் திரும்பி வர வேண்டும் என்று ஆலயத்தில் சென்று தவங்கிடந்தார். சந்தகனும் குதிரையும் திரும்பி வந்ததைக் கேள்வியுற்று, அவரும் வெளியே வந்து பார்த்தார். கோமகனைக் காணவில்லை; குதிரை மட்டுமே நின்று கொண்டிருந்தது! சந்தகன் கூறிய விவரங்களைக் கேட்டு, அவர் தாமே குற்றவாளி என்று தீர்மானித்தார் மைந்தன் வனம் புகுந்தான் என்றதைக் கேட்டதும், ஆவி பிரிந்த தசரதனைப் போல், தாமும் உயிர் துறக்காமலிருந்த பெருங்குற்றம் என்று கருதி,