பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதம பிக்கு ⚫ 111

அவர் சித்தம் தடுமாற ஆரம்பித்தார். நெஞ்சிலே எவ்வளவு வீரமும், உறுதியும் இருந்தபோதிலும், புத்திர சோகத்தின் முன்னால் அவை நிலைத்திருக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் தான் அரசருடைய குலகுருவும் மந்திரியும் முன் வந்து தாங்கள் போய்க் குரிசிலை அழைத்து வருவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டனர்.

சித்தார்த்தரின் உறுதி

வனத்திலே சித்தார்த்தரைக் கண்ட குருதேவரும் அமைச்சரும் தங்களுக்குத் தெரிந்த நீதிகளையெல்லாம் அவருக்கு எடுத்துச் சொல்லிப் பார்த்தனர். சிறிது காலம் ஆட்சி செய்து விட்டுச் சாத்திர முறைப்படி பின்னால் கானகத்தை அடையலாம் என்றும், அரசர் முதல் மக்கள் ஈறாக அல்லற்பட்டுத் துடிப்பதை ஆற்ற வேண்டியது அவர் கடன் என்றும், எல்லா உயிர்களுக்கும் அன்பு காட்டுவதே அறம் என்றும், துறவறம் மேற்கொள்ளக் காட்டுக்கு ஓடிச் செல்ல வேண்டியதில்லை என்றும், அரண்மனையிலிருந்து புலனடக்கத்தைக் கைக்கொண்டு உள்ளத் துறவு கொள்வதே சிறந்தது என்றும் குலகுரு வற்புறுத்திச் சொன்னார். மேலும், “நீ மஞ்சன நீராடி, மகுடம் புனைந்தவுடன் வெண் கொற்றக் குடையுடன் உன்னை ஒரு முறை கண்டு, அந்த மகிழ்ச்சியோடு நான் துறவு பூண்டு வனம் செல்ல வேண்டும்!” என்று மன்னர் உனக்குச் செய்தியனுப்பியுள்ளார்!’ என்றும் கூறினார்.

சித்தார்த்தர் அரசரின் சோகத்திற்குத் தாம் காரணரில்லை என்றும், மக்களும் சுற்றமும் துக்க காரணராக இருக்க முடியாது என்றும், அறியாமையாலேயே-மயக்கத்தாலேயே- துக்கம் தோன்றுகிறது என்றும் விரிவாக விளக்கிக் கூறினார். உலக விஷயங்களில் ஆர்வம் கொண்-