பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிம்பிசாரர் ⚫ 119

அவர்கள் மேற்கொண்டும் தாமாக உடல்களை வதைத்துக் கொள்வதற்காகப் பெரிதும் இரங்கினார். உடலை வதைத்தால் சுவர்க்கம் பெறலாம் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். கௌதம முனிவர் அவர்களுக்குத் தமது கருத்தை எடுத்துக் கூறினார். உடல் உயிரின் வீடு என்றும், அந்த வீட்டை உள்ளிருந்தே இடித்துத் தகர்ப்பது அறிவுடைமை ஆகாது என்றும் அவர் கூறினார். ஆயினும் அவர்கள் கேட்பதாயில்லை.

ஆட்டு மந்தை

இரத்தினகிரியின் சாரலிலே ஒரு நாள் முற்பகலில் கௌதமர் சோலைகளையும், அங்கே பாடித் திரிந்து கொண்டிருந்த பறவைகளையும் பார்த்துச் சிந்தனை செய்து கொண்டிருந்தார். கதிரவன் ஒளியைப் பருகி இன்பத்தில் திளைத்துக் கொண்டு ஆயிரம் ஆயிரமாகப் பூங்கொத்துக்கள் மலர்ந்திருந்தன. வானளாவி வளர்ந்திருந்த மரங்கள் இலைகளும் தழைகளும் நிறைந்து, இன்பமயமாகக் காட்சியளித்தன. புள்ளினங்களும் யாதொரு கவலையுமின்றி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. அவைகளின் மகிழ்ச்சி கீதமாய்ப் பெருகிப் பரவிக் கொண்டிருந்தது. தாவரங்களும், பிராணிகளும், தங்களுக்கு அன்றன்று தேவையுள்ளவைகளை வெறுக்காமலும், அடைதற்கரிய பேறுகளை எண்ணிக்கொண்டு அவதிப்படாமலும் இருப்பதன் காரணம் என்ன? மானிடன் மட்டும் கைக்கு எட்டிய வாழ்வையும் கை விட்டுக் காணாத ஒன்றுக்காகக் கவலை கொண்டு தன்னையே சித்திரவதை செய்து கொண்டிருப்பது ஏன்? மனிதன் பகுத்தறிவைப் பெற்று ஜீவராசிகளுக்குத் தலைமை வகித்திருக்கிறான்; தாவரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் வதைத்து, உதிரத்தில் தோய்ந்து வளர்ந்த தன் அறிவினால் அவன் தன்னை-