பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 ⚫ போதி மாதவன்

சுமந்து செல்லும் ஐயனைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள். வீதிகளையெல்லாம் தாண்டிச் சென்று ஐயனும் ஆயர்களும் வேள்விச் சாலையை அடைந்தார்கள்.

வேள்விச் சாலையின் நடுவே மகத நாட்டு மன்னர் பிம்பிசாரர் நின்று கொண்டிருந்தார். வேத முறைப்படி வேதியர் மந்திரம் ஓதி, அக்கினி வளர்த்து, அதில் ஆகுதிகளைப் பெய்து கொண்டிருந்தனர். தரையிலே முன்னால் வெட்டிய ஆடுகளின் ‘உதிரம் பாய்ந்திருந்தது. மற்றொரு புறத்திலே யாகத் தறியிலே ஒரு வெள்ளாடு கட்டப்பெற்றிருந்தது. தீட்சிதர் ஒருவர் வாளேந்தி அதை வெட்டப் போகும் தருணத்திலே, கௌதமர் ஓடிச்சென்று, அக்கொலையினைத் தடுத்து, அரசரைப் பார்த்து, ‘ஆட்டினைக் கொல்லாது அருள் புரியவேண்டும்!’ என்று கேட்டுக் கொண்டார். ஆட்டின் காலிலும், வாலிலும், கண்டத்திலும் கட்டியிறுக்கி இருந்த கட்டுக்களை அவிழ்த்து, அதை அவரே விடுதலை செய்துவிட்டார். வேள்வித் தீயின் ஒளியைப் பார்க்கிலும் விரிந்த சோதியோடு விளங்கிய அவர் திருமுகத்தை நோக்கிய வண்ணம் யாவரும் திடுக்கிட்டு நின்றனர்.

‘பாவத்தைத் தொலைப்பதற்காகக் கொலையுடன் கூடிய யாகம் செய்தல் புதிய பாவத்தையே விளைவிக்கும். பிராணிகளின் உதிரத்தால் எவனும் தன்னைப் பரிசுத்தமாக்க முடியாது. தேவர்கள் நல்லவராயின், கொலையுடன் கூடிய ஊனுடை வேள்வியால் உள்ளம் களிக்க மாட்டார்கள். அவர்கள் தீயோராயின், அத்தீயோரிடமிருந்து நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?’ என்று வினவினார் விமலர்.

‘வாழும் உயிரினை வாங்கிவிடல்–இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்;