பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 ⚫ போதி மாதவன்

மட்டும் தமது கொள்கைக்குப் புறம்பாக விளங்குவதை உணர்ந்தார். நட்பு உரிமையோடு அவர் கூறிய கூற்றுக் களை நயமான உரைகளாலேயே மறுத்துரைக்க வேண்டும் என்று கருதி, அவர் மறுமொழி புகல ஆரம்பித்தார்:

‘முதுமையையும் மரணத்தையும் கண்டு அஞ்சி, விடு தலை நாட்டத்தோடு நான் துறவு பூண்டு வந்துள்ளேன். கண்ணீரும் கம்பலையுமாக நின்ற உற்றார், உறவினர் யாவரையும் துறந்து வெளியேறியவன் நான்.

‘உலக இன்பங்களைக் கண்டு வெறுத்து விட்டேன். விடங்கொண்ட நாகங்களைப் பார்க்கினும், வானத்திலி லிருந்து வீழும் இடிகளைப் பார்க்கினும், காற்றோடு கலந்து பரவும் பெரு நெருப்பைப் பார்க்கினும் நான் இந்த இன்பங்களைக் கண்டு அதிகமாக அஞ்சுகிறேன்.

‘நிலையற்ற இன்பங்களே நமது உண்மையான இன்பத்தையும், செல்வத்தையும் கொள்ளை கொள்ளும் சோரர்கள்! இவைகள் யாவும் கானல் நீரே.

‘விறகிட்ட தீயைப்போல, இன்பத் தேட்டம் பெருகிக் கொண்டேயிருக்கும். அதற்கு ஓய்வுமில்லை; ஒழிவுமில்லை. அதற்கு அடிமைப்பட்டவர்களுக்கு இம்மையிலும் இன்பமில்லை; மறுமையிலும் இன்ப மில்லை.

‘மயக்கத்தினாலேயே மக்கள் இந்த இன்பங்களின் வலையில் வீழ்கின்றனர். உண்மையை உணர்ந்தவன், சித்தத் தெளிவுடையவன், தீமையைக் கண்டு ஒதுங்கியவன், தானாக மறுபடி இந்த இன்பங்களிலே எங்ஙனம் நாட்டம் கொள்வான்?